வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
துபாய் எக்ஸ்போ 2020-ல் இந்திய அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியது
Posted On:
05 NOV 2021 1:33PM by PIB Chennai
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020-ல் இந்திய அரங்கம் ஒருமாத காலத்தை நிறைவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் தேதியன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை , நுகர்வோர் விவகாரங்கள் , உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இந்த அரங்கைத் திறந்து வைத்தார்.
நவம்பர் 3-ம் தேதி நிலவரப்படி இந்திய அரங்கிற்கு வருகை தந்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சித் திறனை பறைசாற்றும் விதமாக பல்வேறு துறைகள் மற்றும் பல மாநிலங்களின் அடிப்படையிலான அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளும் நமது நாட்டிற்கு இந்த எக்ஸ்போ வாயிலாக கிடைத்துள்ளது. அனுதினமும் பார்வையாளர்களைக் கவர தொடர்ந்து பல கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வெற்றிகரமான நிகழ்வு குறித்து துபாயில் உள்ள இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி கூறுகையில், இந்திய அரங்கிற்கு துபாய் எக்ஸ்போ 2020-ல் அக்டோபர் மாதம் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது என்று குறிப்பிட்டார். ஏராளமான பார்வையாளர்கள் இந்த ஒரு மாதத்தில் இந்திய அரங்கிற்கு வருகை புரிந்ததாகவும் இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்திய அரங்கில் வர்த்தக வாய்ப்புகள், கூட்டு முயற்சிகள், முதலீடுகள் ஆகியவை ஒருபுறம் நடந்தேறி வந்த போதிலும் இந்தியாவின் பண்டிகைகள். உணவு வகைகள், மற்றும் கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்ப்பதாக அமைந்துள்ளன என்று பூரி கூறினார்.
வாரந்தோறும் ஒவ்வொரு தலைப்பிலான அமர்வுகள் இந்த அரங்கில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பருவநிலை மாற்றம் பல்லுயிரி பெருக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளித்துறை, ஊரகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த அமர்வுகளில் கலந்துரையாடல்களும் இந்தத் துறைகள் எதிர்கொள்ளவிருக்கும் விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இது தவிர குஜராத், கர்நாடகா, லடாக் யூனியன் பிரதேசம் போன்ற பல்வேறு இந்தியப் பகுதிகள் குறித்த அமர்வுகளும் நடைபெற்றுள்ளன. அடுத்ததாக இதர மாநிலங்கள், மற்றும் விடுபட்டுள்ள இதரத்துறைகள் குறித்த அமர்வுகளும் நடைபெற உள்ளன.
அக்டோபர் மாதத்தி்ல் இந்திய அரங்கில், தசரா, நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பாரம்பரிய நடனம், கதாகாலட்சேபம், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை வருகை தரும் பார்வையாளர்களுக்காக நடத்தப்பட்டன. நடைபெற்று வரும் தீபாவளி கொண்டாட்டங்கள், இந்த அரங்கை வண்ணமயமாக மாற்றியுள்ளது.
பெருமளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ள அரங்கமாக இந்திய அரங்கம் பெயர் பெற்றுள்ளது.
***
(Release ID: 1769557)
Visitor Counter : 247