பிரதமர் அலுவலகம்
குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களுடன் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
03 NOV 2021 5:22PM by PIB Chennai
நீங்கள் முன்வைத்துள்ள பிரச்சனைகளும் பகிர்ந்துகொண்டுள்ள அனுபவங்களும் மிகவும் முக்கியமானவை. உங்களின் மாநிலம், மாவட்டம், உள்ளூர் பகுதிகள் இந்த நெருக்கடியிலிருந்து எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு விரைவாக விடுபடவேண்டும் என்ற அதே உணர்வை நீங்களும் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். தீபாவளி திருவிழா என்பதால் முதலமைச்சர்களின் பரபரப்பான பணிச்சூழலை நான் உணர்ந்துள்ளேன். நம்மோடு பங்கேற்பதற்கு நேரம் ஒதுக்கியுள்ள மதிப்புமிகு முதலமைச்சர்களுக்கு நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். உன்மையில் மாவட்டங்களின் மக்களுடன் பேசுவதற்கே நான் விரும்பினேன். முதலமைச்சர்களுக்கு இடையூறு செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், தங்களின் மாநிலங்களில் 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்கு உறுதிபூண்டுள்ள முதலமைச்சர்கள் இங்கே பங்கேற்றிருப்பது புதிய நம்பிக்கையை அளிக்கிறது, நமது மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு பலத்தைத் தருகிறது. இந்த கூட்டத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து இந்த விழாக்காலத்தில் நம்மோடு அமர்வதற்கு நேரம் ஒதுக்கியுள்ள முதலமைச்சர்களுக்கு நான் எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துள்கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த நூற்றாண்டில் மிகப் பெரிய பெருந்தொற்று இதுவாகும். இதனால் நாடு பல சவால்களை சந்தித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம், புதிய தீர்வுகளைக் கண்டுபிடித்து புதிய முறைகளை நாம் முயற்சி செய்ததுதான். மாவட்ட நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க புதுமையான வழிகளைக் கையாள வேண்டும். இந்த விஷயத்தில் நன்கு செயல்பட்டு வரும் மாவட்டங்களும் இதே போன்ற சவால்களை சந்தித்தன. உறுதிபாட்டுடனும், புதிய முறைகள் மூலமும் அவை இதனை எதிர்நோக்கின. இதனால் நுண் உத்திகளை உருவாக்கி அனுபவங்களை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவதில் உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்ய வேண்டும். மாவட்ட அதிகாரிகள் தங்கள் மாவட்டங்களில், தேவைப்பட்டால் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு நகரத்திற்கும் வேறுபட்ட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மண்டலத்தை பொறுத்து 20 முதல் 25 பேரைக் கொண்ட குழுக்களை உருவாக்கி இதை செயல்படுத்தலாம். அமைக்கப்படும் குழுக்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவும் முயற்சிக்கலாம். உள்ளூர் இலக்குகளுக்கு மண்டல வாரியாக கால அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேசிய சராசரியை எட்டும் வகையில் உங்கள் மாவட்டங்களில் நீங்கள் சிறந்த நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
தடுப்பூசிகள் குறித்த வதந்திகள் மற்றும் புரிதல் இல்லாமையைப் போக்குவதற்கு விழிப்புணர்வு ஒன்றே தீர்வாகும். மதத் தலைவர்களின் உதவியை இதில் மாநில அதிகாரிகள் நாடலாம். மதத் தலைவர்கள் தடுப்பூசி பிரச்சாரம் குறித்து மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். தடுப்பூசிகள் குறித்த மதத் தலைவர்களின் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க சிறப்புக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாகத் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தல், வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துதல் போன்றவை மூலம் பொது மக்களைத் தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவதற்கு செய்யப்படும் ஏற்பாடுகளில் மாறுதல்களைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு வீட்டையும் சுகாதாரப் பணியாளர்கள் கருணையுடன் அணுகி தடுப்பூசி செலுத்த முனைய வேண்டும். முழுமையான தடுப்பூசி செலுத்துவதை வீடு தோறும் சென்று உறுதிபடுத்த வேண்டும்.
நண்பர்களே,
“நாம் தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தடுப்பூசி இயக்கத்தை எடுத்துச் செல்ல தயாராகி வருகிறோம் வீடு தோறும் தடுப்பூசி என்ற மந்திரத்துடன் இரண்டு தவணை தடுப்பூசி என்ற பாதுகாப்பு வளையத்தை ஒவ்வொரு குடும்பமும் எட்டும் வகையில் இதை அணுகுகிறோம்.
நண்பர்களே,
ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டும் போது, முதல் தவணை தடுப்பூசியுடன் இரண்டாம் தவணை தடுப்பூசிக்கும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பெருந்தொற்று குறையும் போதெல்லாம் அவசர உணர்வும் குறைகிறது. மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கான அவசரம் குறைகிறது. “குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களை நீங்கள் தொடர்பு கொண்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். இதைப் புறக்கணித்தால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டது போன்ற பிரச்சனைகளை நாமும் சந்திக்க நேரிடும்”
நண்பர்களே,
அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் கீழ் இந்தியா 2.5 கோடி தடுப்பூசி டோஸ்களை ஒரே நாளில் செலுத்தி சாதனைப்படைத்துள்ளது. இந்தியாவின் திறமைக்கு இந்த சாதனை சான்றாக விளங்குகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் சக பணியாளர்கள் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகளை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு உள்ளூர் தேவைகள் மற்றும் சூழலுக்கு ஏற்ப தங்களது அணுகுமுறைகளை மாவட்ட அதிகாரிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
உங்கள் அனைவரிடமும் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். உங்களைப்போன்ற இளம் அணியினரிடம் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இதனால்தான் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்த உடனேயே எனது நாட்டின் நண்பர்களை சந்திப்பது என உறுதியாக முடிவெடுத்தேன். நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வணக்கம்!
•••••••
(Release ID: 1769543)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam