மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்தது
Posted On:
27 OCT 2021 4:35PM by PIB Chennai
முழுமையான இரட்டை இளநிலை படிப்புகளான பி ஏ பி எட், பி எஸ் சி பி எட் மற்றும் பிகாம் பி எட் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆசிரியர் கல்வி தொடர்பாக தேசிய கல்வி கொள்கை 2020 வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்களில் இது ஒன்றாகும்.
தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் மூலமாக மட்டுமே 2030-ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் செயல்பாடுகள் இருக்கும். நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும்.
கல்வி துறைக்கான பட்ட படிப்போடு வரலாறு, கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம் அல்லது வணிக பிரிவுகளிலும் பட்டப்படிப்பை இத்திட்டம் வழங்கும். இதற்கான பாடத் திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு வடிவமைத்துள்ளது.
ஆரம்ப குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு, ஒருங்கிணைந்த கல்வி, இந்தியா மற்றும் அதன் விழுமியங்கள், கலைகள், கலாச்சாரங்கள் குறித்த புரிதல் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் வழங்கும்.
தற்போதுள்ள 5 வருட திட்டத்துடன் ஒப்பிடும் போது நான்கு வருடங்களிலேயே இந்த கல்வி நிறைவடைவதால் மாணவர்களுக்கு ஒரு வருடம் மிச்சமாகும். 2022-23-ம் கல்வி ஆண்டில் இருந்து நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் தொடங்கும். தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இதற்கான சேர்க்கை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766921
(Release ID: 1767017)
Visitor Counter : 336