பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்கள் வட்டமேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்

Posted On: 25 OCT 2021 3:01PM by PIB Chennai

நட்பு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில்களை சென்றடைவதற்கான முக்கிய முயற்சியாக, 2021 அக்டோபர் 25 அன்று புது தில்லியில் நடைபெற்ற ராணுவ கண்காட்சி 2022-க்கான தூதர்களின் வட்ட மேசைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

2022 மார்ச் 10-13 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெறும் ராணுவ கண்காட்சி 2022-ன் திட்டமிடல், ஏற்பாடுகள் மற்றும் பிற விவரங்களைப் பற்றி வெளிநாட்டுத் தூதர்களிடம் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புத் துறை மீதுள்ள உலகளாவிய ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில், தூதர்கள், அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வட்ட மேசையில் கலந்து கொண்டனர். ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி, செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு ராஜ் குமார், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் குஜராத் அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சியான டிஃப் எக்ஸ்போ 2022-ல் கலந்துகொள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்த திரு ராஜ்நாத் சிங், அனைவரின் நலனுக்காகவும், கூட்டுறவு உணர்வோடு பரஸ்பரம் ஆதாயம் அளிக்கும் அடிப்படையில் வர்த்தகத்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றார். அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ராணுவ கண்காட்சி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"பாதுகாப்பு உற்பத்தி துறையில் வளர்ச்சியின் தூணாக உள்ள இந்தியா, டிஃப் எக்ஸ்போ 2022-ல் தனது திறனை வெளிப்படுத்தும். நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, வெற்றிகரமான புதிய முயற்சிகள் மற்றும் சர்வதேச கூட்டுகளுக்கான விதைகளை கண்காட்சி விதைக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு தளவாடங்கள் துறையில் தனது திறனை மேம்படுத்தி, முதலீடுகளை அதிகரித்து நட்பு நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்தியா தயாராக உள்ளது என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766285(Release ID: 1766371) Visitor Counter : 550