மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 25 OCT 2021 4:10PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று தொடங்கி வைத்தார். துடிப்புமிக்க இளைஞர்களுக்கு கள அளவில் பயிற்சி அளிப்பதை இந்த இரண்டு வருட திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

ஐஐஎம் என்றழைக்கப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் வகுப்பறை கல்வியுடன் மாவட்ட அளவில் தீவிர பயிற்சி அளித்து, ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது இத்திட்டத்தின் லட்சியமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், திறன் மேம்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதன் மூலம் அடிமட்டத்தில் சமூக மாற்றத்தின் ஊக்கியாக செயல்பட பயிற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். கல்வி பங்குதாரர்களான ஐஐஎம்களுக்கு தேவையான வசதிகளை செய்து, இந்த கூட்டுறவு மூலம் மாற்றத்தின் வெற்றிக் கதையை எழுத வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தற்சார்பு இந்தியாவை நோக்கி நாம் நகர்கிறோம் என்றார் அவர். துறைகளில் நிகழும் மிகப்பெரிய மாற்றங்கள், புதிய திறன்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கான தேவையை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

21-ம் நூற்றாண்டின் தேவைகள் மற்றும் உள்ளூர் யதார்த்தங்களுக்கு ஏற்ப, உலகளாவிய சிந்தனை மற்றும் உள்ளூர் அணுகுமுறை ஆகியவற்றுடன் திறன் மேம்பாட்டு முயற்சிகளில் உள்ளூர் மொழியை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவற்றில் பணியாற்றுமாறு பயிற்சியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றிப் பேசிய திரு பிரதான், கல்விக்கும் திறன்களுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையையும், இந்த திசையில் சமீபத்திய முயற்சிகளையும் கோடிட்டுக் காட்டினார். தேசியக் கல்விக் கொள்கை குறித்து சக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஐஐஎம்களை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766303

-----



(Release ID: 1766337) Visitor Counter : 236