சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பூசி வழங்கல் நிலவரம் மற்றும் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆய்வு

Posted On: 23 OCT 2021 6:43PM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பூசி வழங்கலின்  முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர்களுடன் மத்திய சுகாதாரச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் இன்று ஆய்வு செய்தார்.

தடுப்புமருந்து வழங்கலின், குறிப்பாக இரண்டாம் டோஸ் தடுப்பூசியின், வேகத்தையும் அளவையும் அதிகரிக்குமாறு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கூட்டத்தின் போது அறிவுறுத்தப்பட்டன.

2021 அக்டோபர் 21 அன்று 100 கோடி தடுப்பூசிகள் எண்ணிக்கையை நாடு எட்டியுள்ள நிலையில் இன்றையக் கூட்டம் நடைபெற்றது.

தகுதியுள்ள பயனாளிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் அவர்களது இரண்டாம் டோசை இன்னும் பெறவில்லை என்று தெரிவித்த சுகாதாரச் செயலாளர், அவர்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டார்.

நாடு தழுவிய தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் கீழ் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் இந்த வருடத்தின் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இருப்பதால் தடுப்புமருந்து வழங்கும் வேகத்தை அதிகரிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.

தடுப்பூசிப் பெற்றுள்ள மக்கள் குறைந்த அளவு உள்ள மாவட்டங்களை அடையாளம் கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

உலகின் மிகப்பெரிய இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் நாடு தழுவிய கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் 2021 ஜனவரி 16 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1765989

*****************



(Release ID: 1765994) Visitor Counter : 241