பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவப் பொறியாளர் சேவைகளுக்கான, திட்டக் கண்காணிப்பு இணையதளம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கிவைத்தார்

Posted On: 20 OCT 2021 2:00PM by PIB Chennai

ராணுவப் பொறியாளர் சேவைகளுக்கான திட்டக் கண்காணிப்பு இணையதளத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.  டிஜிட்டல் இந்தியா திட்டப்படி இந்த இணையதளத்தை விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவி தகவல்களுக்கான பாஸ்கராச்சார்யா தேசிய மையம் ((BISAG-G) உருவாக்கியது.

புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த இணையதளம், ராணுவப் பொறியாளர் சேவைகள் அமல்படுத்திய முதல் திட்ட மேலாண்மை - நிர்வாகம் ஆகும். இதன் மூலம்  ராணுவத் திட்டப் பணிகளை ஆரம்பம் முதல் முடிவு வரை  அவ்வப்போது கண்காணிக்க முடியும் ராணுவப் பொறியாளர் சேவை மட்டும் அல்லாமல், பாதுகாப்புப் படைகளும், திட்டப் பணிகள் குறித்தத் தகவலைப் பெற முடியும்.  இந்த அமைப்பின் அறிவியல் மேலாண்மைக்கு ராணுவப் பொறியாளர் சேவைகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

ராணுவப் பொறியாளர் சேவை திட்டங்களின் கண்காணிப்பில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ள இந்த நடவடிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டினார் மற்றும் டிஜிட்டல் முறைக்கு சென்றதற்காக பாராட்டுத் தெரிவித்தார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாட்டில் உற்பத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் திறனை அதிகரிக்க, 9 இதர மின்னணு - நிர்வாக பயன்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கையில் ராணுவப் பொறியாளர் சேவைகள் ஈடுபட்டுள்ளது.  இந்தப் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்புகள், மருத்துவமனைகள், ஓடுதளங்கள், கடல்சார் கட்டுமானங்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற கட்டுமானங்களில் அதி நவீன தொழில்நுட்பத்தை ராணுவ பொறியாளர் சேவைகள் பின்பற்றுகிறது.

முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளர் ஜெனரல் பிபின் ராவத், தரைப்படைத் தளபதி ஜெனரல் மனோஜ் எம். நரவானே, விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் விவேக் ராம் சவுத்திரி, பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

**********

(Release ID: 1765123)



(Release ID: 1765162) Visitor Counter : 244