அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியாவின் உயிரியல் பொருளாதார மையமாக வடகிழக்கு உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
19 OCT 2021 4:18PM by PIB Chennai
இந்தியாவின் உயிரியல் பொருளாதார மையமாக வடகிழக்குப் பகுதி உருவாக்கப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கிழக்கு இமயமலை பிராந்தியம் மிகப்பெரிய பல்லுயிர் வளம் நிறைந்த மண்டலங்களில் ஒன்றாகவும், உலகின் 34 பல்லுயிர் ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாகவும் திகழ்கிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த விலைமதிப்பற்ற மரபணு வளங்களை பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசத்தின் நலனிற்கும் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இம்பாலில் உள்ள உயிர் வளங்கள் மற்றும் நிலையான மேம்பாட்டு நிறுவனத்தை (ஐபிஎஸ்டி) பார்வையிட்டப் பிறகு அவர் இவ்வாறு பேசினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் தொடர்ச்சியான மற்றும் புதுப்பிக்கப்பட்டக் கவனம் காரணமாக, 2025-க்குள் உலகளாவிய உயிரி உற்பத்தி மையமாக இந்தியா அங்கீகரிக்கப்படும் என்றும் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாகத் திகழும் என்றும் கூறினார்.
இந்தியாவின் உயிரியல் பொருளாதாரம் 2025-க்குள் தற்போதைய 70 பில்லியன் டாலரில் இருந்து 150 பில்லியன் டாலர் இலக்கை அடைய உள்ளது. மேலும், 2024-25-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் இலக்குக்கு இது திறம்படப் பங்களிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764914
(Release ID: 1764936)
Visitor Counter : 355