சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட் தடுப்பூசி வழங்கல் நிலவரம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு
Posted On:
19 OCT 2021 11:23AM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார இயக்க நிர்வாக இயக்குநர்களுடன் மத்திய சுகாதாரச் செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் நேற்று ஆய்வு செய்தார். உலகின் மிகப்பெரிய இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் நாடு தழுவிய கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் 2021 ஜனவரி 16 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு பில்லியன் டோஸ்களை நாடு நெருங்கி வருகிறது என்று குறிப்பிட்ட சுகாதாரச் செயலாளர், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார். தகுதியுள்ள பயனாளிகளில் குறிப்பிடத்தக்க அளவினர் அவர்களது இரண்டாம் டோசை இன்னும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இரண்டாம் டோசுக்காக காத்திருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான அளவு தடுப்பூசிகள் பல மாநிலங்களின் கையிருப்பில் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட பணியை நிறைவு செய்வதற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயாராக உள்ளது. தடுப்புமருந்து வழங்கலின் வேகத்தையும் அளவையும் அதிகரிக்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன.
தடுப்பூசிப் பெற்றுள்ள, மக்கள் குறைந்த அளவு உள்ள மாவட்டங்களை அடையாளம் கொண்டு அவற்றுக்கு முன்னுரிமை அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. உள்ளூர் சவால்களை எதிர்கொண்டு தடுப்புமருந்து வழங்கல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இரண்டாம் டோஸ் வழங்கலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை பகிர்ந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சர்வதேச பயணங்களுக்கான பல்வேறு வழிகாட்டுதல்களை கடந்த ஒரு வருடமாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
உள்துறை அமைச்சகம்,
இமிக்கிரேஷன் அலுவலகம், விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசித்தப் பிறகு வழிகாட்டுதல்களைச் சீராய்வு செய்யும் பணியில் அது ஈடுபட்டுள்ளது. தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் மனோகர் அக்னானி, இணை செயலாளர் திரு லாவ் அகர்வால் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764851
(Release ID: 1764916)
Visitor Counter : 235