இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மகாராஷ்டிரா/கோவாவில் உள்ள 8,393 கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் தன்னார்வலர்கள் தூய்மை இயக்கத்தை நடத்தி வருகின்றனர்: நேரு யுவ கேந்திர சங்கம்
Posted On:
16 OCT 2021 2:58PM by PIB Chennai
“மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள 8393 கிராமங்களில் 1,10,424 இளம் தன்னார்வலர்கள் தூய்மை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு கிராமத்திற்கு ஒரு நாளைக்கு 37 கிலோ கழிவுகளை நாங்கள் சேகரிக்கிறோம். ஒரு நாளைக்கான இலக்கை விட 2 கிலோ இது அதிகம். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கழிவு சேகரிப்பில் 66 சதவீதத்தை நிறைவு செய்துள்ளோம்,” என்று நேரு யுவ கேந்திரா சங்கத்தின் மும்பை மண்டல இயக்குநர் திரு பிரகாஷ் குமார் மானூர் இன்று தெரிவித்தார்.
நேரு யுவ கேந்திரா சங்கம் மகாராஷ்டிரா மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் புனே ஆகியவற்றின் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.
2021 அக்டோபர் 1 முதல் 31 வரை தேசிய அளவிலான தூய்மை நடவடிக்கைகளை, குறிப்பாக ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவுகளை நீக்குவதற்கான பணிகளை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் நேரு யுவ கேந்திரா சங்கம் முன்னெடுத்து வருகிறது.
விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறையின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காணொலி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து 30 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டு அதே நாளில் அகற்றப்படுகிறது என்று திரு மானூர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் உள்ள 13,136 கிராமங்களில் இருந்து குப்பைகளை சேகரிப்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும். 452 கிராமங்களில் தற்போது இது செயல்படுத்தப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கான இலக்கு 4,59,760 கிலோ கழிவுகளை அகற்றுவதாகும்.
விளக்கக்காட்சி ஒன்றை வழங்கிய திரு மானூர், நேரு யுவ கேந்திராவின் செயல் திட்டம் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் கோவா முழுவதும் அதன் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்ட பல தூய்மை நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் இத்திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதாகும். கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள், வணிக சமூகங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விளையாட்டு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் கைகோர்த்து நடைபெற்று வரும் தூய்மை இந்தியா செயல்பாடுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கழிவு சேகரிப்பு தவிர, 459 நினைவுச்சின்னங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன, 254 பாரம்பரிய நீர் ஆதாரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன மற்றும் 1820 பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இதர பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன என்று திரு மானூர் கூறினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1764352
***
(Release ID: 1764438)