தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்தியாவில் தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் துவக்கம்

Posted On: 14 OCT 2021 2:36PM by PIB Chennai

தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளுக்கு உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை, மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவுசின்ஹ் சவுகான் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு சவுகான், ‘‘பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்க, தொலை தொடர்பு துறையில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம், தொடங்கப்பட்டுள்ளது என்றார். தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளின் இறக்குமதிக்கு இதர நாடுகளை இந்தியா சார்ந்திருப்பதை, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டம் குறைக்கும் என்றார்.

நாட்டில் உலகத்தரத்திலான தயாரிப்பை ஊக்கவிக்க, தரமான பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என தொழில்துறை தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிப்பதற்காக, அதிகரிக்கப்பட்ட முதலீடு மற்றும் வருவாய் என மொத்தம் ரூ.12,195 கோடி  மதிப்பில், உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்படுகிறது. 

இத்திட்டம் 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2024-25ம் நிதியாண்டு வரை இந்தியாவில் முதலீடு செய்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியானவர்கள். 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு உதவி அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் வழிகாட்டுதல்கள் படி, 16 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உட்பட 31 நிறுவனங்கள் (8 உள்நாட்டு நிறுவனங்கள், 7 சர்வதேச நிறுவனங்கள்) இத்திட்டத்துக்கு தகுதியான நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இவற்றின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்: 

இந்த 31 நிறுவனங்களும் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.3,345 கோடி முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் 40,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். இவற்றின் உற்பத்தி, இதே காலத்தில் ரூ.1.82 லட்சம் கோடியாக இருக்கும். இத்திட்டம் புதிய பொருட்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும். டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கில் தொலை தொடர்புத்து தயாரிப்புகள் முக்கிய பங்காற்றும்.

********



(Release ID: 1763976) Visitor Counter : 264