வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஐ.நா.வின் உலகக் குடியிருப்பு தினம் 2021 கொண்டாடப்பட்டது

Posted On: 11 OCT 2021 4:39PM by PIB Chennai

கரியமில வாயு இல்லாத உலகத்திற்கான நகர்ப்புற செயல் திட்டத்தை விரைவுபடுத்துதல்” என்ற மையக்கருத்துடன் ஐ.நா.வின் உலகக் குடியிருப்பு தினம் 2021 இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் சிங் பூரி, அனைவருக்கும் வீட்டு வசதி, அனைவருக்கும் சேவை அளித்தல், அனைவருக்கும் சிறந்த போக்குவரத்து வசதி, நீடித்த நகர்ப்புற மேம்பாட்டின் முன்களத்தில் மக்களை வைத்திருத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய கரியமில வாயுவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இன்றைய நிகழ்வுக்கான மையக்கருத்து இந்தியாவுக்கு மிகவும் பொறுத்தமானது என்று கூறிய அமைச்சர், உலகளவில் நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து வருவது எரிசக்தித் தேவையை அதிகரித்துள்ளது. உலகளவில் 78 சதவீத எரிசக்தி பயன்பாடும் 70 சதவீத கரியமில வாயு வெளியேற்றமும் நகர்ப்புறங்களில் இருப்பதாக தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் தனிநபர் பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் மிகவும் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)-யில் 70 சதவீதம் இந்தியாவின் நகரப்பகுதிகள் பங்களிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைப்பதற்கு மோடி அரசால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், பொலிவுறு நகரங்கள் இயக்கம், நகர்ப்புற போக்குவரத்து, அம்ருத் போன்ற நகர்ப்புற இயக்கங்கள் பங்களிப்பு செய்துள்ளன என்று திரு.ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

இந்த நிகழ்வில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.துர்கா சங்கர் மிஸ்ரா, கூடுதல் செயலாளர் சுரேந்திர குமார் பாக்டே, ஐ.நா.முகமைகள், மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

*****



(Release ID: 1763021) Visitor Counter : 191