பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கனவுக்கான துணிவு 2.0 மற்றும் இளம் விஞ்ஞானிகள் விருதுகளை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார்

Posted On: 04 OCT 2021 3:17PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் புதுதில்லியில் நடைபெற்ற கனவுக்கான துணிவு 2.0 போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அக்டோபர் 4 அன்று பாராட்டினார். தனிநபர் பிரிவில் 22 பேர், புதிய தொழில் பிரிவில் 18 பேர் என மொத்தம் 40 வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் விருதுகளை வழங்கினார். நாட்டில் உள்ள இளம் சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்களுக்காக கனவுக்கான துணிவு 3.0-வையும் அவர் தொடங்கி வைத்தார்.

2019 ஆம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானிகள் விருதையும் வழங்கி பேசிய திரு.ராஜ்நாத் சிங், புதிதாக சிலவற்றை உருவாக்குவதற்கு நாட்டில் உள்ள இளைஞர்களின் ஆற்றல், ஆர்வம், உறுதி ஆகியவற்றை இந்த விருதுகள் பிரதிபலிப்பதாக கூறினார். புதிய கண்டுபிடிப்பு, வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் இந்த வெற்றியாளர்களிடம் உள்ள அளப்பரிய நம்பிக்கை எதிர்காலத்தில் சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் இளம் மனங்களை ஈர்க்கவும் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

வலுவான தற்சார்புள்ள புதிய இந்தியாவை கட்டமைக்கும் அரசின் தீர்மானத்தை கூட்டான முயற்சியின் மூலமே சாதிக்க முடியும் என்பதை பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். வேகவேகமாக மாறி வரும் புவி – அரசியல் மாற்றங்களில் கூட ராணுவத்தின் திறனை விரிவுபடுத்த பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பை எட்டுவதற்கான அரசின் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு திரு.ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார்.

கணினி சார்ந்த பாதுகாப்பில் ஆராய்ச்சி செய்வதற்காக குஜராத் பல்கலைக்கழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எச்.ஏ.பாண்ட்யாவும்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், பாதுகாப்புத் துறை செயலாளருமான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டியும் இந்த நிகழ்ச்சியில் பரிமாற்றம் செய்து கொண்டனர்.

****

 



(Release ID: 1760839) Visitor Counter : 380