குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சிறந்த சாலை இணைப்பு முக்கியம் : குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 04 OCT 2021 2:21PM by PIB Chennai

வடகிழக்குப் பகுதியில் சுற்றுலாத்துறை வளர்ச்சி, சரக்குப் போக்குவரத்தை எளிதாக்குதல் மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு சிறந்த சாலை இணைப்பு முக்கியம் என குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

வடகிழக்குப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று மேகாலயா வந்தார். ஷில்லாங் தேசிய நெடுஞ்சாலையில் ஷில்லாங் - தாவ்கி பிரிவில் சாலை மேம்பாடு மற்றும் அகலப்படுத்தும் பணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வடகிழக்குப் மாநிலங்களின் பல திட்டங்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதியை வெளிப்படை தன்மையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்திஅனைத்து வளர்ச்சிப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். அனைத்து திட்டங்களையும் தாமதமின்றி துரிதபடுத்தினால், வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இன்ஜின்களாக மாறும் வாய்ப்புள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல், நாட்டின் வளர்ச்சி முழுமையடையாது.

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அமைதியான சூழலை பயன்படுத்தி, இப்பகுதி முன்னேற்றத்தை துரிதபடுத்த வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதிகளில் மழை பெய்யும் மாதங்களில் சாலைகள் போடுவதற்கு தடைகள் ஏற்படலாம். அதனால், இங்கு புத்தாக்க வடிவில் சாலைகள் அமைக்க வேண்டும். நாட்டில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிறந்த சாலைகளை அமைக்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் விமான இணைப்பையும் மேம்படுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நாட்டின் இதர பகுதிகளுக்கு நேரடி விமான போக்குவரத்து ஏற்பட வேண்டும்.

மேகாலயா அழகான மாநிலம். இங்கு சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்அதே நேரத்தில், சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது.

மேகாலயா போன்ற மாநிலங்களில், வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில்களையும் மேம்படுத்த வளரும் தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ள லகாடாங் மஞ்சள் மற்றும் சுக்குப் பொடி பிரபலம். இவற்றை உலக சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்புகள் உள்ளனஇதனால் இங்குள்ள இளைஞர்கள் வேளாண் தொழிமுனைவோர்களாக மாறி, உற்பத்தியை மேம்படுத்தி, பொருட்களை பேக்கிங் செய்து சந்தையில் நல்ல விலை கிடைக்க சிறு விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு பேசினார்.

மேகாலயாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் திருமிகு ரெபேகாவுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேகாலயா ஆளுநர் திரு சத்ய பால் மாலிக், முதல்வர் திரு கன்ராட் கே.சங்மா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760753

                                                                                                --------


(Release ID: 1760816) Visitor Counter : 226