உள்துறை அமைச்சகம்

என்எஸ்ஜி படையின் கார் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார், நாட்டுக்காக பணியாற்ற இளைஞர்களுக்கு அறைகூவல்

Posted On: 02 OCT 2021 6:04PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) சுதர்ஸன் பாரத் பரிக்கிரமாஎன்ற கார் பேரணியை தில்லி செங்கோட்டையில் இருந்து மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

அதோடு, தண்டி, வடகிழக்கு பகுதி, லே, கன்னியாகுமரி உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்ட மத்திய ஆயுதப்படைகளின் சைக்கிள் பேரணியையும் அவர் கொடியசைத்து வரவேற்று நிறைவு செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற திரு பஜ்ரங் புனியாவை அமைச்சர் கௌரவித்தார். மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய், திரு அஜய் குமார் மிஸ்ரா மற்றும் திரு நிஷித் பிரமானிக், மத்திய உள்துறை செயலாளர், மத்திய அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர், ஒட்டுமொத்த நாட்டுக்கும் இன்று மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான நாள் என்றார். தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் முன்னாள் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின்  பிறந்தநாள் இன்று என்று அவர் கூறினார்.

தங்கள் பயணத்தின் போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய சுமார் 1000 மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் இன்று ராஜ்காட்டை அடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட மத்திய ஆயுத காவல் படையினரின் 45 மிதிவண்டி பயணங்கள் ஒரு மாத காலம் 41 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தில்லியில் உள்ள செங்கோட்டையை இன்று அடைந்துள்ளதாக திரு ஷா கூறினார்.

நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்காமல் இருந்தாலும் நாட்டுக்காக சேவை செய்வது நமது கைகளில் உள்ளது என்று இளைஞர்களிடம் அவர் தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்து சுதந்திரத்தை அடைந்து நம்மை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள், நாமும் நமது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக வாழலாம். இதற்காக எந்த தியாகமும் தேவையில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக நமது பங்களிப்பை அளித்தால் மட்டுமே போதும் என்று அவர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டுக்கான வளர்ச்சிப் பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பாதையில் நாம் பயணிக்க தொடங்க வேண்டும் என்று திரு அமித்ஷா கூறினார்.

நாட்டின் இளைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்தால் அனைத்தையும் சாதிக்க முடியும் என்றும் உலக அரங்கில் இந்தியா தன்னிறைவு அடைந்து நாம் பெருமையுடன் திகழலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1760382

*****************



(Release ID: 1760417) Visitor Counter : 249