குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

முதியோர் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான புதுமையான தீர்வுகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 01 OCT 2021 4:59PM by PIB Chennai

முதியோர் எதிர்கொள்ளும் தினசரி சிக்கல்களுக்கான புதுமையான தீர்வுகளை இந்திய புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) உருவாக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

முதியவர்களைப் பராமரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக மட்டும் இருக்கக்கூடாது என்றும், நாம் ஒவ்வொருவரும் முன் வந்து இந்த உன்னத நோக்கத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புதுதில்லி விக்யான் பவனில் வாயோஷ்ரேஷ்த சம்மான்-2021 தேசிய விருதை வழங்கிய பின்னர் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், நமது மூத்த குடிமக்களை 'வயதானவர்கள்' என்று அழைக்காமல் 'மூத்தவர்கள்' என்று அழைக்க விரும்புவதாக கூறினார்.

தனியார் துறையில் வேலை வழங்குபவர்களுடன் மூத்த குடிமக்களை இணைப்பதற்கான சேக்ரட் இணையதளத்தை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார். லாசி அறிக்கை-2020-ஐக் குறிப்பிட்ட அவர், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சுறுசுறுப்பாக உள்ளனர், எனவே, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, அதிகாரமிக்க மற்றும் தன்னம்பிக்கையளிக்கும் வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியம் என்றார். அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தின் பரந்த களஞ்சியமாக மூத்தோர் இருப்பதை எடுத்துரைத்த அவர், புதிய தளத்தில் இணைந்து நமது மூத்த குடிமக்களின் திறன்கள் மற்றும் அனுபவத்திலிருந்து பயனடையுமாறு தனியார் துறையை வலியுறுத்தினார்.

தேசிய உதவி எண்னையும் (எல்டர் லைன்) விழாவின் போது திரு நாயுடு தொடங்கி வைத்தார். மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவில் மூத்த குடிமக்கள் இருப்பதைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், அவர்களைப் பாதுகாக்க எளிதான மற்றும் திறமையான குறைதீர்க்கும் முறையைக் கொண்டு வந்த உதவி மையத்தைப் பாராட்டினார். நாடு முழுவதிலுமுள்ள மூத்த குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக டாடா அறக்கட்டளையுடன் இணைந்து அரசு அமைத்துள்ள உதவி எண் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செயல்படும்.

நிகழ்ச்சியில் பேசிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திருமதி பிரதிமா பவுமிக், முதியோருக்கு முன்மாதிரியான சேவைகளை வழங்கிய புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேசிய அங்கீகாரம் வழங்குவதன் மூலம் முதியோர் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவதற்கான  அமைச்சகத்தின் முக்கிய முயற்சியாக தேசிய விருதுகள் உள்ளன என்று கூறினார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ராம் தாஸ் அத்வாலே, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர், திரு ஆர் சுப்ரமணியம் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759996

*****************



(Release ID: 1760075) Visitor Counter : 206