வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

விநியோக சங்கிலிகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் இந்திய- பசிபிக் பகுதியில் அதிகமான ஈடுபாட்டை நோக்கி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் செயலாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 27 SEP 2021 5:19PM by PIB Chennai

சர்வதேச விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதும், தற்போது சாதகமாக உள்ள புவி அரசியல் நிகழ்வை முழுவதும் மூலதனமாக மாற்றுவதும் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா- இந்தியா வர்த்தக சாம்பியன் கூட்டத்தின் துவக்க விழாவில் இன்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்திற்கு இணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் அமைச்சர், இரண்டு நாடுகளின் வர்த்தக துறையின் துடிப்பான பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் ஆஸ்திரேலிய- இந்திய தலைமைச் செயல்  அதிகாரிகள் அமைப்பு மன்றத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் இந்த மன்றம் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். நம்பத்தகுந்த கூட்டாளிகளாக செயல்படும் வேளையில், விநியோக சங்கிலிகள் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துவது மற்றும் இந்திய- பசிபிக் பகுதியில் அதிகமான ஈடுபாட்டை நோக்கி இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

விநியோக சங்கிலிகளைத் தொடர்ந்து இயக்குவது, சேவைகளின் செயல்முறைக்கு மறுவடிவம் அளிப்பது ஆகியவற்றை நோக்கி இரு நாடுகளின் அரசுகளும் பயணிப்பதால் கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இரு தரப்பு உறவுகள் பல மடங்கு வலுவடைந்திருப்பதாக திரு கோயல் பாராட்டினார்.

தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக தேசிய ஒற்றை சாளர அமைப்புமுறை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய- ஆஸ்திரேலிய உறவை வலுப்படுத்துவதில் இந்த குழுவின் வர்த்தக சாம்பியன்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார் அவர்.

பல்வேறு துறைகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758616

*****************



(Release ID: 1758665) Visitor Counter : 185