ரெயில்வே அமைச்சகம்

திறன் இந்தியா திட்ட முன்னேற்றத்தில், இந்திய ரயில்வே முன்னோக்கி செல்கிறது: திரு அஸ்வினி வைஷ்ணவ்

Posted On: 17 SEP 2021 12:36PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, ரயில்வே பயிற்சிமையங்கள் மூலம் ஆரம்பகட்ட பயிற்சி அளித்து இளைஞர்களை மேம்படுத்த, ரயில் கவுசல் விகாஸ் திட்டத்தை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் ரயில் பவனில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திரு அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

நாடு முழுவதும் இன்று விஷ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படுவதால் இது புனிதமான தினம். பிரதமருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள். பிறந்தநாளில் பிரதமருக்கு ரயில்வே துறையின் பரிசாக ரயில் கவுசல் விகாஸ் திட்டம் அர்ப்பணிக்கப்படுகிறது. திறன் இந்தியா தொலைநோக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கின் ஒருங்கிணைந்த பகுதி. ரயில் கவுசல் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பல தொழில்களில் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம். தொலை தூர பகுதிகளிலும், ரயில் கவுசல் விகாஸ் திட்டத்தின் கீழ் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும்.

 

3 ஆண்டுகளில் 50,000 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படும். முதலில் 1000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். எலக்ட்ரீசியன், வெல்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிட்டர் ஆகிய தொழில் பிரிவுகளில் 100 மணி நேரம் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். பிராந்திய தேவைகளுக்கு ஏற்ப பயிற்சி திட்டத்தில் இதர தொழில்கள் ரயில்வே மண்டலங்களால் சேர்க்கப்படும். இந்தப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மூலம் இந்த தேர்வு வெளிப்படையான முறையில் 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள், பயிற்சியின் அடிப்படையில் ரயில்வேயில் வேலைவாய்ப்பு கோரும் உரிமை இல்லை.

பயிற்சி மையங்களின் விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755676

*****************



(Release ID: 1755857) Visitor Counter : 200