அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுத்தமான எரிசக்தித் துறையில், இந்தியா-அமெரிக்கா இடைய அதிக ஒத்துழைப்பு தேவை: டாக்டர் ஜித்தேந்திர சிங் அழைப்பு
Posted On:
14 SEP 2021 3:17PM by PIB Chennai
தூய்மையான எரிசக்தித் துறையில், இந்தியா - அமெரிக்கா இடையே அதிக ஒத்துழைப்பு தேவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் அழைப்பு விடுத்தார். சுத்தமான எரிசக்திக்கு நமது அணுசக்தித் திட்டத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் உறுதியையும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க எரிசக்தித் துறைத் துணை அமைச்சர் டேவிட் எம்.துர்க் தலைமையிலான அமெரிக்கக் குழுவினர், மத்திய அமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது உயிரி எரிபொருள் மற்றும் ஹைட்ரஜன் போன்ற சுத்தமான எரிசக்தித் துறைகளில் கவனம் செலுத்த, யுக்தியுடன் கூடிய தங்களின் கூட்டுறவை இந்தியாவும், அமெரிக்காவும் புதுப்பித்து வருகின்றன என்று அமெரிக்க அமைச்சர் டேவிட் எம். துர்க் கூறினார்.
தற்போது இந்தியா, 6780 மெகா வாட் அணுமின்சக்தி உற்பத்தி செய்வதாகவும், அதிக அணுமின் நிலையங்கள் அமைக்க திட்டுமிட்டுள்ளதால், அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031ஆம் ஆண்டுக்குள் அணு மின்சக்தி உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தி 22,480 மெகாவாட் அணு மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமெரிக்கக் குழுவினரிடம் டாக்டர். ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
அணுசக்தித் துறையில், பிரதமரின் தொலைநோக்கான கூட்டு முயற்சிக் கருத்தைக் குறிப்பிட்ட டாக்டர். ஜித்தேந்திர சிங், உணவுப் பாதுகாப்புக்கு காமா கதிர்வீச்சுத் தொழில்நுட்பம் தனியார் நிறுவனங்களுடன் ஏற்கனவே பகிரப்பட்டுள்ளதாகவும், தற்போது 26 காமா கதிர்வீச்சு பதப்படுத்தும் ஆலைகள் நாட்டில் தனியார் துறை பங்களிப்புடன் செயல்படுகின்றன என்றும் கூறினார்.
புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க, மருத்துவ ஐசோடோப் தயாரிப்புக்கு அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் ஆராய்ச்சி அணு உலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் எடுத்துக் கூறினார்.
அணுசக்தி, பசுமை ஹைட்ரஜன் துறையிலும், இந்தியாவுடன், அமெரிக்கா கூட்டாக இணைந்து செயல்படும் என டாக்டர். ஜித்தேந்திர சிங்கிடம் அமெரிக்க அமைச்சர் டேவிட் எம். துர்க் உறுதியளித்தார்.
அமெரிக்கா - இந்தியா எரிவாயு திட்டக் குழுவின் மாற்றத்துக்கும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இது உயிரி எரிவாயு, ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களை இயற்கை எரிவாயுவுடன் இணைத்துப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754760
-------
(Release ID: 1754850)
Visitor Counter : 225