வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
நமது நகரங்கள் உற்பத்தி வளங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியா சாத்தியமாகும்: மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி
Posted On:
13 SEP 2021 2:56PM by PIB Chennai
நமது நகரங்கள் உற்பத்தி வளங்களைப் பெற்றிருந்தால் மட்டுமே தற்சார்பு இந்தியா சாத்தியமாகும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
‘கனெக்ட் கரோ 2021- சமமான, நிலையான இந்திய நகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைத்துப் பேசிய அவர், குடிமக்களை மையமாகக்கொண்ட உள்கட்டமைப்பு மற்றும் மாறிவரும் தொழில்நுட்பம் ஆகியவை நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு முக்கிய அம்சமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
உலக வளங்கள் நிறுவனத்தால் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சி ஐந்து நாட்கள் (செப்டம்பர் 13-17) நடைபெறும்.
விரைவான நகரமயமாக்கல் நடவடிக்கை காரணமாக 2030-ஆம் ஆண்டிற்குள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70% நமது நகரங்களின் மூலம் கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் நகரங்கள், ஒப்பிடக்கூடிய இந்திய நகரங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கின்றன. 5 ட்ரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத்தை உருவாக்கும் பிரதமரின் அழைப்பை ஏற்று நமது நகரங்களின் பொருளாதார நடவடிக்கைகளை அதேபோல அதிகரிக்க வேண்டும். கடந்த ஆறு ஆண்டுகளில் (2015-2021) நகர்புற மேம்பாட்டிற்கான செலவு எட்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்
நம் நாட்டு பொருளாதாரத்தின் இயந்திரமாக நகரங்கள் மாறிவரும் போதும், விரைவான நகரமயமாக்கல் மற்றும் புலம்பெயர் மக்களின் வரத்தால் உள்கட்டமைப்பில் ஏற்படும் குறைகளை நீக்குவதும் மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை சுமார் இரண்டு மடங்காக, 630 மில்லியனாக அதிகரிக்கும். இந்த அளவிலான வளர்ச்சிக்கு நாம் வசதியை ஏற்படுத்த வேண்டுமானால், நகர்ப்புற உள்கட்டமைப்புகளை கணிசமாக தரம் உயர்த்த வேண்டும். நகரங்களில் கொவிட்-19 பெருந்தொற்றின் மோசமான தாக்கம் இதற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளது, என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754499
*****************
(Release ID: 1754557)
Visitor Counter : 226