பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை ராஜஸ்தானில் உள்ள பார்மரில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி திறந்து வைத்தனர்

Posted On: 09 SEP 2021 2:31PM by PIB Chennai

இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை ராஜஸ்தானில் உள்ள பார்மருக்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 925ஏ-வின் சட்டா-காந்தவ் தடத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் இணைந்து 2021 செப்டம்பர் 9 அன்று திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கிடையிலும் அவசரகால தரையிறங்கும் வசதிக்கான பணிகளை 19 மாதங்களில் நிறைவு செய்ததற்காக இந்திய விமானப்படை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தனியார் துறைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த மூன்று கிலோமீட்டர் ஓடுதள வசதியில் இந்திய விமானப்படை விமானங்களை தரையிறக்குவது புதிய இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க புதிய வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றும், சுதந்திரத்தின் 75-வது வருடத்திலும், 1972 போரில் இந்தியா வெற்றி பெற்ற 50-வது ஆண்டிலும் இது நடைபெறுவது இன்னும் சிறப்பு சேர்க்கிறது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச எல்லைப்பகுதிக்கு அருகில் இந்த வசதி அமைந்துள்ளது நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள உறுதியை வெளிப்படுத்துகிறது என்று கூறிய பாதுகாப்பு அமைச்சர், “இந்த நெடுஞ்சாலையும், தரையிறங்கு தளமும் மேற்கு பகுதியில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும்,” என்றார்.

எல்லையோர பகுதிகளின் வளர்ச்சி அரசின் முன்னணி முக்கியத்துவங்களில் ஒன்றாக இருப்பதாக கூறிய திரு ராஜ்நாத் சிங், எல்லைப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார். அடல் சுரங்கம், ரோஹ்தங் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள உம்லிங்லா பாசில் 19,300 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான இடத்தில் வாகனத்தில் செல்லக்கூடிய சாலையை கட்டமைத்தது உள்ளிட்டவை சில உதாரணங்கள் என்று அவர் கூறினார்.

அவசரகால தரையிறங்கும் வசதியை தவிர, குந்தன்புரா, சிங்கானியா மற்றும் பகாசர் கிராமங்களில் மூன்று ஹெலிபேடுகளும் இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படைகளின் தேவைகளுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதூரியா, பாதுகாப்பு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி மற்றும் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753478

*****************



(Release ID: 1753568) Visitor Counter : 257


Read this release in: English , Urdu , Hindi , Punjabi