குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பைத் தடுக்க குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 04 SEP 2021 5:01PM by PIB Chennai

கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊரக மக்களும் அணுகும் வகையில் கண் சிகிச்சைகளை குறைந்த செலவில் வழங்கி, பார்வை இழப்புகளை இயன்ற அளவு தடுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். ஊரகப் பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தனியார் துறையினர் மிகப்பெரும் அளவில் பங்கேற்கலாம் என்று அவர்  தெரிவித்தார்.

பவாகடாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவாசிரமத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகையில், ஸ்ரீ சாரதாதேவி கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடத்தை அவர் துவக்கி வைத்தார். பார்வையை பரிசாக அளிப்பதைஉன்னத செயல் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, தயக்கத்தைக் களைந்து, தங்கள் இறப்பிற்குப் பின்னர் கண்களை தானமாக வழங்க மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். கருவிழிகளை தானமாக வழங்குபவர்களின் தேவை நாட்டில் பெருமளவில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், கருவிழி தானத்தை  மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்துவது அவசியம் என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு உகந்த உள்கட்டமைப்பை உருவாக்குமாறு அரசு மற்றும் தனியார் துறையினரை திரு நாயுடு கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு அரசு கட்டிடத்திலும், நிறுவனத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. எனவே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும், மாநில அரசுகளும் அவற்றை கட்டாயமாக்க வேண்டும்”, என்று அவர் தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, கண் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு தனியார் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752013

*****************(Release ID: 1752064) Visitor Counter : 193