குடியரசுத் தலைவர் செயலகம்
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் ஆயுஷ் மருத்துவ முறைகள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன: குடியரசுத் தலைவர்
Posted On:
28 AUG 2021 3:09PM by PIB Chennai
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், குறிப்பாக தொற்றின் இரண்டாவது அலையின் போது மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதில் ஆயுஷ் மருத்துவ முறைகள் மிக முக்கிய பங்கு வகித்ததாக குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஷ்வவித்யாலயாவிற்கு இன்று (ஆகஸ்ட் 28, 2021) அடிக்கல் நாட்டிப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர் அடிக்கல் நாட்டிய பிறகு அங்கு மழை பெய்தது. இத்திட்டத்திற்கான புனிதத் தருணமாக குடியரசுத் தலைவர் அதைக் குறிப்பிட்டார்.
பண்டைய காலம் முதல் நம் நாட்டில் பாரம்பரிய மற்றும் மரபுசாரா மருத்துவ மற்றும் குணப்படுத்தும் முறைகள் பழக்கத்தில் இருந்து வருவதாகக் கூட்டத்தில் பேசிய போது அவர் கூறினார். அவற்றின் வளர்ச்சிக்காக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. இது போன்ற மருத்துவ முறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயுஷ் அமைச்சகம் நிறுவப்பட்டது. உத்தரப் பிரதேச அரசும் 2017-ஆம் ஆண்டு ஆயுஷ் துறையை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அவசரகால மருந்துகளாக தாதுக்கள் மற்றும் உலோகங்களில் இருந்து மருந்துகளைக் கண்டுபிடிப்பவர்களது முன்னோடியாக பாபா கோரக்நாத் கருதப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். எனவே இந்தப் பல்கலைக்கழகத்திற்கு “மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஷ்வவித்யாலயா” என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
மூலிகை மற்றும் மூலிகை மருந்துகளின் வளமான பாரம்பரியம் குறித்த அறிவு பழங்குடி சமூகத்திடம் காணப்பட்ட போதும், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆயுஷ் மருத்துவ முறைகள் நாடு முழுவதும் அதிகம் பிரபலமடைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மூலிகை மருந்துகள் மற்றும் தாவரங்களின் தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் வனப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஷ்வவித்யாலயா அமைக்கப்படுவதன் வாயிலாக ஆயுஷ் முறைகளின் கல்வியும் புகழும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749881
*****************
(Release ID: 1749928)
Visitor Counter : 192