மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் ஓராண்டு சாதனைகளை விளக்கும் கையேடு மற்றும் சில முக்கிய நடவடிக்கைகள்: அமைச்சர்கள் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் திரு வீரேந்திர குமார் வெளியிட்டனர்
Posted On:
24 AUG 2021 4:18PM by PIB Chennai
தேசியக் கல்விக்கொள்கை 2020-இன் ஓராண்டு சாதனைகளை விளக்கும் கையேடு, நிபுன் பாரத் திட்டத்துக்கான பொருள்கள், திக்ஷா இணைய தளத்தில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், நியாஸ் மெய்நிகர் பள்ளி, என்சிஇஆர்டி-யின் மாற்றுக் கல்வி அட்டவணை, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘ப்ரியா’ கையேடு போன்ற முக்கிய நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. வீரேந்திர குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்னா தேவி, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் திருமதி. அனிதா கர்வால் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
இந்தியாவை தற்சார்புடையதாக ஆக்குவதிலும், கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும், ஆசைகளையும் நனவாக்குவதிலும், தேசியக் கல்விக் கொள்கை வழிகாட்டும் தத்துவமாக இருக்கும். உலகத்தின் அறிவு மையமாக இந்தியாவை மாற்றும் இலக்கை அடைய கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு தேசியக் கல்விக் கொள்கை வாழும் உதாரணமாக உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் முன்னேற்றத்தை நாம் பார்க்கும் போது, நமது மாணவர்களின் எதிர்காலம் பற்றி நமக்கு அதிக நம்பிக்கை கிடைக்கிறது. கல்வி என்பது, பட்டங்களை பெறுவதற்கான வெறும் போட்டி அல்ல. அது குணநலன்களையும், நாட்டின் மேம்பாட்டுக்கான அறிவையும் வளர்க்கும் கருவியாகும். பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இணையதள வசதி சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. வீரேந்திர குமார், ‘‘வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிக்குமான வழிகளை அணுகல் திறக்கிறது. அதனால் அனைவருக்குமான அணுகல் சூழலை உருவாக்குவது முக்கியம். எந்தவொரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் விழிப்புணர்வும், மக்களுக்கு உணர்த்துவதும் முக்கியம்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748543
-----
(Release ID: 1748663)
Visitor Counter : 208