பாதுகாப்பு அமைச்சகம்

ஒருங்கிணைந்த கூட்டணிக்கான இந்தியப் பாதுகாப்பு தொழில்துறைக்கான சர்வதேசத் தொடர்பு’ என்ற தலைப்பில் இந்தியா, மலேசியா இடையே வலைதளக் கருத்தரங்கு

Posted On: 18 AUG 2021 11:55AM by PIB Chennai

ஒருங்கிணைந்த கூட்டணிக்கான இந்தியப் பாதுகாப்பு தொழில்துறைக்கான சர்வதேசத் தொடர்புஎன்ற கருப்பொருளில் இந்தியா மற்றும் மலேசியா இடையே ஒரு வலைதள கருத்தரங்கிற்கும், கண்காட்சிக்கும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ உற்பத்தித் துறை இந்த நிகழ்ச்சியை நடத்தியது. 2025-ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ராணுவ ஏற்றுமதியை உயர்த்தவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் நட்பு நாடுகளுடன் நடைபெற்று வரும் தொடர் வலைதளக் கருத்தரங்குகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தொழில்துறை உற்பத்தியின் இணைச் செயலாளர் திரு அனுராக் பாஜ்பாய் மற்றும் இரண்டு நாடுகளின் உயர் அதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மிகவும் மவிவான விலையில், உலகத்தரம் வாய்ந்ததாக இந்திய ராணுவ தயாரிப்புகள்  அமைந்துள்ளதாக இணைச் செயலாளர் கூறினார். விமான பராமரிப்பின் முனையமாக இந்தியா தன்னை முன்னிலைபடுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் துறையில் இரண்டு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படலாம் என்று கூறினார்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட 9 இந்திய நிறுவனங்களும், ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி சிஸ்டம், ஏஎம்பி கார்ப்பரேஷன் போன்ற மலேசிய நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. சுமார் 150 பிரமுகர்கள் வலைதளக் கருத்தரங்கில் பங்கேற்றனர். 100-க்கும் மேற்பட்ட அரங்குகள், காணொலி வாயிலாக நடைபெற்ற கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746882

*******

 

(Release ID: 1746882)



(Release ID: 1746901) Visitor Counter : 259