நிதி அமைச்சகம்

உள்நாட்டு கொள்கலன் பணிமனைகள்/ கொள்கலன் சரக்கு நிலையங்கள்/ விமான சரக்கு நிலையங்களை மூடுவதற்கான சீரிய வழிமுறைகள் அறிவிப்பு

Posted On: 17 AUG 2021 11:26AM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு கொள்கலன் பணிமனைகள் மற்றும் கொள்கலன் சரக்கு நிலையங்களின்  பொறுப்பாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இதுபோன்ற வசதிகளை அதிகபட்சம் நான்கு மாத காலத்திற்குள் மூடுவதற்கான சீரிய வழிமுறைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன் இந்தக் காலக் கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளைப் பாதுகாத்து வருவதால், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் உள்நாட்டு கொள்கலன் பணிமனைகள் மற்றும் கொள்கலன் சரக்கு நிலையங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இது போன்ற வசதிகள், சுங்கச் சட்டம் 1962 இன் கீழ் அறிவிக்கப்பட்டு, சுங்க அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. எனினும், அவ்வப்போது இந்த வசதிகளை மூடுவதற்கு அதன் பொறுப்பாளர் விருப்பம் தெரிவிப்பதுண்டு. இதுபோன்ற நிலையில், நீக்கப்படாத, பறிமுதல் செய்யப்பட்ட ஏற்றுமதி/இறக்குமதி சரக்குகளை அகற்றுவது அவசியமாகிறது. இந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால் பொறுப்பாளர்கள் இன்னல்களுக்கு உள்ளாவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் குறிப்பிட்டது.

16.8.2021 தேதியிட்டு சுங்க துறையால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர், அதிகார வரம்பிற்குட்பட்ட முதன்மை ஆணையர்/ சுங்க ஆணையரிடம் உள்நாட்டு கொள்கலன் பணிமனைகள்/ கொள்கலன் சரக்கு நிலையங்களின் இயக்கத்தை நிறுத்துவதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம். சுங்கத் துறையின் துணை/ உதவி ஆணையாளர் அளவில் உள்ள ஓர் நோடல் அதிகாரி அந்த பணிமனை/நிலையத்தில் இருக்கும் சரக்குகளை உரிய நேரத்திற்குள் அகற்றும் பணியில் ஆதரவளிப்பார்.

இந்தப் புதிய நடைமுறை, தேவையற்ற செலவு மற்றும் நேர விரயம் தவிர்க்கப்படுவதை உறுதி செய்யும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறப்பட்ட தேதி முதல் அதிகபட்சம்  நான்கு மாதத்திற்குள் வசதிகளை மூடுவதற்கான பணி நிறைவடையும். இது, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க வர்த்தக முன்முயற்சியாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746589



(Release ID: 1746627) Visitor Counter : 231