சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவி விவரங்கள்

Posted On: 11 AUG 2021 4:01PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்கள் திரு நாராயணசாமி மற்றும் திருமிகு பிரதிமா பவுமிம் கீழ்காணும் தகவல்களை அளித்தனர்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மூன்றாம் பாலினத்தவருக்கு உதவும் வகையில், முதல் பொதுமுடக்கத்தின் போது 5,711 பேருக்கும், இரண்டாம் அலையின் போது 5,938 பேருக்கும் தலா ரூ 1500 வழங்கப்பட்டது.

முதல் பொதுமுடக்கத்தின் போது தமிழ்நாட்டில் நிதியுதவி பெற்ற மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 1,036 ஆகும். இரண்டாம் அலையின் போது தமிழ்நாட்டில் நிதியுதவி பெற்ற மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 710 ஆகும்.

அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட காரணத்தால் இந்தியா முழுவதும் 2017-ம் ஆண்டு 745 நபர்களும், 2018-ம் ஆண்டு 875 பேரும், 2019-ம் ஆண்டு 704 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொருத்தவரை, அதிகளவில் போதை மருந்து உட்கொண்ட காரணத்தால் 2017-ம் ஆண்டு 48 நபர்களும், 2018-ம் ஆண்டு 46 பேரும், 2019-ம் ஆண்டு 108 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.

அடல் வயோ அப்யுதய் திட்டத்தின் ஒரு அங்கமான மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 551 வயது முதிர்ந்தோருக்கான காப்பகங்கள்/தொடர் பராமரிப்பு இல்லங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 66 காப்பகங்களுக்கு அடல் வயோ அப்யுதய் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன.

பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்காக ஸ்மைல் திட்டத்தின் கீழ் விரிவான மத்திய துறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 4,13,670 பேர் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 6,814 நபர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,789 பேர், பெண்கள் 3,025 பேர் ஆவர்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் வசதி படைத்தவர்களை (கிரீமி லேயர்) தீர்மானிப்பதற்கான வருவாய் அளவுகோலை மாற்றியமைப்பதற்கான முன்மொழிதல் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தங்களது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்  நகலை அனுப்பியுள்ள ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள், பட்டியல் சாதிகளின் துணை வகைப்படுத்தலை கோரின.

இதற்காக நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. தன்னுடைய அறிக்கையை 2008 மே 1 அன்று சமர்ப்பித்த ஆணையம், அரசமைப்பின் 341 பிரிவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துகளை கோர அரசு முடிவெடுத்தது. கருத்துகளை விரைந்து அனுப்புமாறு 2019 டிசம்பர் 9 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நினைவூட்டப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744802

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744800

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744794

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744797

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744799

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744804

 

-----



(Release ID: 1744953) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Gujarati , Telugu