பிரதமர் அலுவலகம்

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் 2021-இல் பிரதமர் உரையாற்றினார்


தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றி அடையச்செய்வது இந்திய தொழில்துறையின் முக்கிய பொறுப்பாகும்: பிரதமர்

அந்நிய முதலீடு குறித்து ஐயம் கொண்டிருந்த இந்தியா, இன்று அனைத்து வகையான முதலீடுகளையும் வரவேற்கிறது: பிரதமர்

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில்தான் இன்று நாட்டு மக்களின் நம்பிக்கை அடங்கியுள்ளது: பிரதமர்

நமது தொழில்துறை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் பலனாக எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது மற்றும் எளிதான வாழ்க்கை மேன்மை அடைகிறது. நிறுவனங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் இதற்கு முக்கிய காரணி: பிரதமர்

நாட்டின் நலனில் அக்கறைகொண்டு மிகப்பெரும் இடர்களை சந்திப்பதற்கு தயாரான ஓர் அரசு தற்போது உள்ளது, இதற்கு முந்தைய அரசுகளுக்கு அரசியல் இடர்பாடுகளை சந்திக்கும் துணிவு இல்லை: பிரதமர்

இந்த அரசிற்கு சீர்திருத்தங்கள் என்பது நம்பிக்கை சார்ந்தது, நிர்ப்பந்தம் அல்ல; அதனால்தான் இந்த அரசால் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிகிறது: பிரதமர்

முன் தேதியிட்டு வரி வசூலிப்பதை கைவிடும் முடிவு அரசு மற்றும் தொழில்துறை இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்தும்: பிரதமர்

Posted On: 11 AUG 2021 6:17PM by PIB Chennai

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் 2021-ல் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். 5 ட்ரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத்தை அடையும் இலக்கை எட்டுவதற்காக பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை நோக்கிய பிரதமரின் உறுதித்தன்மையை கூட்டத்தின்போது தொழில்துறை தலைவர்கள் பாராட்டினார்கள். “இந்தியா@75: தற்சார்பு இந்தியாவிற்காக அரசும் வர்த்தகமும் இணைந்து பணியாற்றுதல்என்ற கருப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில், உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்வது உற்பத்தித் திறனை மேம்படுத்துவது, நிதித்துறையை மேலும் துடிப்பானதாக மாற்றுவது தொழில்நுட்பத்துறையில் தலைமைத்துவம் வகிக்கும் வகையில் இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவர்கள் தங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர், விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்திற்கு இடையே, 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார். புதிய தீர்வுகளுக்கும், இந்திய தொழில்துறையினரின் புதிய இலக்குகளுக்கும் இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றார் அவர். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வெற்றி அடையச்செய்வது இந்திய தொழில்துறையின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார். பெருந்தொற்றின்போது தொழில் துறையினரின் நெகிழ்வுத் தன்மையை பிரதமர் பாராட்டினார்.

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் திறன்களுக்கான நம்பிக்கை சூழலை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில் துறையினரை திரு மோடி கேட்டுக் கொண்டார். தற்போதைய அரசின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தற்போதைய அமைப்பின் செயல் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்றைய புதிய இந்தியா, புதிய உலகத்துடன் பயணிக்க தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் முதலீடுகள் மீது ஐயம் கொண்டிருந்த இந்தியா தற்போது அனைத்து விதமான முதலீடுகளையும் வரவேற்கிறது. அதேபோல வரி கொள்கைகள், முதலீட்டாளர்களிடையே அவநம்பிக்கையைத் தூண்டும், அதே இந்தியாவால் உலகில் மிகவும் போட்டித் தன்மை வாய்ந்த பெருநிறுவன வரி மற்றும் வரி முறையால் பெருமை கொள்ள முடியும். முந்தைய காலங்களின் வழக்கமான முறை, எளிதான வர்த்தக குறியீட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொழிலாளர் குறியீடுகளாக சீரமைக்கப்பட்டுள்ளது; வெறும் வாழ்வாதாரமாக கருதப்பட்ட வேளாண்மை, சீர்திருத்தங்களின் வாயிலாக சந்தைகளுடன் இணைக்கப்படுகிறது. இதன் விளைவாக அதிகபட்ச அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீடுகளை இந்தியா பெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்நிய செலாவணி வளங்களும் உயர்ந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

ஒரு சமயத்தில், அந்நியம் என்பது மேன்மையுடன் தொடர்புடையதாக இருந்தது. இதுபோன்ற உளவியலின் தாக்கங்களை தொழில் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் நன்கு அறிந்திருந்தனர். கடின உழைப்புடன் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையும் வெளிநாட்டு பெயர்களுடன் விளம்பரப்படுத்தும் வகையில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இன்று நிலைமை வேகமாக மாறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இன்று நாட்டு மக்களின் நம்பிக்கை இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் அடங்கியுள்ளது. குறிப்பிட்ட பொருளை தயாரிப்பவர் இந்தியராக இல்லாத பட்சத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கவே ஒவ்வொரு இந்தியரும் விரும்புகின்றனர்.

இன்று, இந்திய இளைஞர்கள் களத்தில் நுழையும்போது, எந்தவிதமான தயக்கமும் அவர்களுக்கு இல்லை என்று பிரதமர் கூறினார். கடினமாக உழைக்கவும், இடர்களை சந்திக்கவும், பலன்களைக் கொண்டு வரவும் அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் இந்த இடத்திற்கு உரியவர்கள் என்ற உணர்வை இளைஞர்கள் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். அதேபோல இந்தியாவின் புதுமை நிறுவனங்களில் இன்று தன்னம்பிக்கை காணப்படுகிறது. 6-7 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 3-4 ஆக இருந்திருக்கக்கூடிய யூனிகார்ன் என்று அழைக்கப்படும் தனித்துவம் வாய்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்ந்திருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த 60 நிறுவனங்களுள் 21 நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் வளர்ச்சி அடைந்தன. பன்முக தன்மை வாய்ந்த துறைகளில் செயல்படும் இந்த யூனிகார்ன் நிறுவனங்கள் அனைத்து நிலைகளிலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைக்கின்றன. அதுபோன்ற புதிய நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன், வளர்ச்சிக்கான பிரம்மாண்ட வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதை இது உணர்த்துகிறது.

நமது தொழில்துறை மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் பலனாக எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது மற்றும் எளிதான வாழ்க்கை மேன்மை அடைகிறது என்று அவர் கூறினார். நிறுவனங்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசிற்கு சீர்திருத்தங்கள் என்பது நம்பிக்கை சார்ந்தது, நிர்ப்பந்தம் அல்ல என்பதால்  இந்த அரசால் கடினமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடிவதாக பிரதமர் கூறினார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா போன்ற முன்முயற்சிகள் சிறு வணிகர்கள் கடன் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். வைப்பு காப்பீடு மற்றும் கடன் உறுதி நிறுவன திருத்த மசோதா சிறு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் அரசு முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

முந்தைய காலத்தில் தவறுகளை சரி செய்வதற்காக முன் தேதியிட்டு வரி வசூலிப்பதை கைவிட அரசு முடிவு செய்ததாக பிரதமர் தொழில் துறையினரின் பாராட்டுகளை குறிப்பிட்டு, அரசு மற்றும் தொழில் துறையினருக்கு இடையேயான நம்பிக்கையை இந்த முன்முயற்சி வலுப்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் நலனில் அக்கறைகொண்டு மிகப்பெரும் இடர்களை சந்திப்பதற்கு தயாரான ஓர் அரசு தற்போது உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்இதற்கு முந்தைய அரசுகளுக்கு அரசியல் இடர்பாடுகளை சந்திக்கும் துணிவு இல்லாததால் சரக்கு மற்றும் சேவை வரி பல ஆண்டுகள் முடங்கியிருந்ததாக அவர் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது மட்டுமல்லாமல் அதன் வசூலில் மிகப்பெரும் சாதனையையும் நாம் கண்டு வருகிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

------

 



(Release ID: 1744951) Visitor Counter : 288