சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மருத்துவச் சேவைகள், உள்கட்டமைப்பு வசதி, தடுப்பூசித் திட்டம், பொது சுகாதார முறை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தகவல்

Posted On: 10 AUG 2021 1:46PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம்:

ரூ. 64,180 கோடி மதிப்பில் 6 ஆண்டு காலத்திற்கு (நிதியாண்டு 2025-26 வரை) பிரதமரின் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தேசிய சுகாதார இயக்கத்திற்கும் கூடுதலானதாகும். நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய நடவடிக்கைகள்:

•        கூடுதல் கவனம் செலுத்தப்படும் 10 மாநிலங்களில் 17,788 ஊரக சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவளிப்பது.

•        அனைத்து மாநிலங்களிலும் 11,024 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்குவது.

•        அனைத்து மாவட்டங்கள் மற்றும் அதிகக் கவனம் செலுத்தப்படும் 11 மாநிலங்களில் உள்ள 3382 வட்டார அளவிலான பொது சுகாதாரப் பிரிவுகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களை அமைப்பது.

•        நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தை வலுப்படுத்துவது.

•        ஒருங்கிணைந்த மருத்துவத் தரவு தளத்தை விரிவுபடுத்துவது.

•   15 மருத்துவ அவசரகால அறுவைச் சிகிச்சை மையங்கள் மற்றும் 2 நடமாடும் மருத்துவமனைகளை உருவாக்குவது.

பொது சுகாதார அமைப்பு முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்:

அனைவருக்கும் சமமான, அணுகக்கூடிய வகையில் மற்றும் மலிவான விலையில் மருத்துவச் சேவையை வழங்குவதற்கு மாநிலங்கள்/ யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை அளிக்கும் நோக்கத்தோடு, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய ஊரக சுகாதார இயக்கம் மற்றும் தேசிய நகர்புற சுகாதார இயக்கம் ஆகியவை அமல்படுத்தப்படுகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் முன்முயற்சியின் கீழ் பொது சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக, ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார மையங்கள்/ ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதன்படி சுமார் 77,406 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (ஊரகப் பகுதிகளில் 73,391, நகர்ப்புறங்களில் 4,015) தற்போது இயங்கி வருகின்றன. மேலும் ஆரம்ப சுகாதார அளவில் மருத்துவ அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டு காலத்திற்கு ரூ. 70,051 கோடியை மானியமாக வழங்க 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.

உலகளாவிய தடுப்பூசித் திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்:

தடுப்பூசித் திட்டத்தை வலுப்படுத்தவும், கொவிட்- 19 பெருந்தொற்றுக் காலத்தில் இந்தத் திட்டம் முறையாக அமல்படுத்தப்படுவது மற்றும் அதன் சேவைகள் இடையறாது வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும், அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெருந்தொற்று காலகட்டத்தில் தடுப்பூசி சேவைகளை பாதுகாப்பாகத் தொடர்வதற்கு தேசிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளின் விநியோகச் சங்கிலி மற்றும் இதர தளவாடத் தேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்படாத அல்லது முழுமையாகப் போடப்படாத குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்திரதனுஷ் அதிதீவிர இயக்கம், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் முறையே 936583, 941886 மற்றும் 912314 குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இந்த எண்ணிக்கை 14928, 14456 மற்றும் 13556 ஆக பதிவாகியுள்ளது.

மருத்துவ மற்றும் செவிலியர் படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு:

கடந்த 2014-ஆம் ஆண்டு 54,348 ஆக இருந்த எம்பிபிஎஸ் படிப்பிற்கான இடங்கள் 53.22% அதிகரித்து 2020-ஆம் ஆண்டு 83,275 ஆக உள்ளது. இதேபோல முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் 30,191 -லிருந்து (2014) 54,275 ஆக (2020) 80% உயர்ந்துள்ளது. அதேபோல இளங்கலை செவிலியர் படிப்புகளுக்கான இடங்கள் கடந்த 2014-ஆம் ஆண்டின் 83,192- விட 21.24% உயர்ந்து, 2020 இல் 1,00,865 ஆக இருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு 10,784 ஆக இருந்த முதுநிலை செவிலியர் படிப்புகளுக்கான இடங்கள், 23.53% அதிகரித்து, 2020 ஆம் ஆண்டில் 13,322 ஆக இருந்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மனநல சேவைகளின் அணுகல்:

மன அழுத்தம் உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வதற்காக தேசிய மனநல ஆரோக்கிய திட்டத்தை 1982-ஆம் ஆண்டு முதல் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. மாவட்ட மருத்துவ விநியோக அமைப்புமுறை வரையில் பல்வேறு அளவுகளில் மனநலன் சார்ந்த சேவைகளை வழங்குவது; தற்கொலைத் தடுப்பு சேவைகள், பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்த மேலாண்மை, பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை அளிப்பது; மனநலம் சார்ந்த உள்கட்டமைப்பு உபகரணம் மற்றும் மனித வளத்தை அதிகரிப்பது; பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தேசிய மனநல ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மாநில/ யூனியன் பிரதேச அரசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது.

ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் புதிய மருத்துவமனைகள்:

தேசிய சுகாதார இயக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் முதலியவற்றைத் தவிர நாட்டின் சுகாதார துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா மற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவ கல்விக்கான மனித வளங்கள் முதலிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எய்ம்ஸ் போன்ற புதிய அமைப்புகளை உருவாக்குவது நிலுவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தரம் உயர்த்துவது, வசதி குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளை மேம்படுத்துவது, மருத்துவத் தொழில்சார் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கொவிட் மேலாண்மைக்காக இந்திய கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு முறை தயார்நிலை தொகுப்பின் கீழ் நிதியாண்டு 2020-21 இல் ரூ. 8147.28 கோடி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பின் இரண்டாவது பகுதியில் கீழ் ரூ. 23,123 கோடியை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரிய நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய தளம்:

அரிய நோய்களுக்கான தேசியக் கொள்கை, 2021-இன் வழிகாட்டுதலின்படி அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நன்கொடை வழங்குவதற்கான மின்னணு தளத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  https://rarediseases.nhp.gov.in/ என்ற மின் முகவரியில் இந்தத் தளத்தை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744365

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744364

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744363

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744362

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744360

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744358

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744361

 

-----



(Release ID: 1744530) Visitor Counter : 521