மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட்டின் போது கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள்

Posted On: 09 AUG 2021 3:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் பல்வேறு மட்டங்களில் இந்திய அரசு ஆலோசனைகளை நடத்தியது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது கற்றல் இடைவெளியை நிரப்புவதற்காக சமூக சமுதாய அமைப்புகளுடன் 2021 ஜனவரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெருந்தொற்றின் போது கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமரின் இ-வித்யா எனும் விரிவான நடவடிக்கை 2021 மே 17 அன்று தொடங்கப்பட்டது.

டிஜிட்டல்/ஆன்லைன்/காற்று வழி கல்வி என பல்முனை கல்வி அணுகலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் இது ஒன்றிணைக்கும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தரமான மின் உள்ளடக்கத்தை வழங்குவதற்காக திக்‌ஷா எனும் ஒரே தேசம், ஒரே டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டது.

ஸ்வயம் பிரகாஷ் தொலைக்காட்சி சேனல்கள், வானொலி, சமுதாய வானொலி, சிக்‌ஷா வாணி எனும் சிபிஎஸ்இ போட்காஸ்ட், காதுகேளாதோர் மற்றும் பார்வை குறைபாடுள்ளோருக்கான சிறப்பு மின் உள்ளடக்கம், மனநல ஆதரவுக்காக மனோதர்ப்பன் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அகில இந்திய உயர் கல்வி ஆய்வின் படி, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. 2015-16-ம் ஆண்டு 1.60 கோடியாக இருந்த பெண்களின் சேர்க்கை அளவு, 2019-20-ல் 18 சதவீதம் அதிகரித்து 1.89 கோடியாக இருந்தது.

பெண்களிடையே கல்வியை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களை அதிகளவில் திறப்பது, மாநில அரசுகள் கல்வி நிறுவனங்கள் திறப்பதை ஊக்குவித்தல், அதிகளவிலான கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தேசிய கல்விக் கொள்கை (2020) வழங்கியுள்ள பரிந்துரைகளின் படி, பாலின உள் அடக்குதல் நிதி நிறுவுதல், பெண்களுக்கான இலவச விடுதி வசதிகளை ஏற்படுத்துதல், புதிய பல்முனை உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல், பெண்கள்/மூன்றாம் பாலினத்தவர்/மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகையை தொடங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

பாரம்பரிய இந்திய விழுமியங்கள் மற்றும் அனைத்து அடிப்படை மனித மற்றும் அரசமைப்பு விழுமியங்களை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு தேசிய கல்விக் கொள்கை 2020 வழிவகை செய்கிறது.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் வாயிலாக கலா உற்சவத்தை ஒவ்வொரு வருடமும் கல்வி அமைச்சகம் நடத்துகிறது. உள்நாட்டு கலை மற்றும் கலாச்சாரத்தை கல்வியில் ஊக்குவிப்பதற்காக இது நடத்தப்படுகிறது.

திரு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை குறிப்பதற்காக மாண்புமிகு பிரதமரால் 2015 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்ட ஒரே இந்தியா ஒப்பற்ற இந்தியாதிட்டம், நமது நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை தன்மை, தேசிய ஒருமைப்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊக்கத்தொகை, விருதுகள், நிதியுதவி ஆகியவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

உயர்கல்வியை ஊக்குவிப்பதற்காக விருப்பத்தேர்வு சார்ந்த புள்ளிகள் முறை, உயர்சிறப்பு நிலைக்கான சாத்தியமுள்ள பல்கலைக்கழங்கள், குறிப்பிட்ட துறையில் உயர்சிறப்பு மையங்கள், கல்வி ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பு, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி, இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சி, தீன் தயாள் உபாத்யாயா கௌஷல் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744059

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744058

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744055

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744056

*****************



(Release ID: 1744159) Visitor Counter : 296