மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்திய இணையதள ஆளுகை மன்றம்: முதல்முறையாக அக்டோபர் மாதம் நடைபெறுகிறது

Posted On: 09 AUG 2021 2:22PM by PIB Chennai

வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு இந்திய இணையதள ஆளுகை மன்றம்- 2021 நடைபெறும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய தேசிய இணையதள இணைப்பகத்தின் (நிக்சி) தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியும், இந்திய இணையதள ஆளுகை மன்றம் 2021-இன் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான திரு அனில் குமார் ஜெயின் புது தில்லியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். மின்னணு இந்தியாவிற்கான உள்ளடக்கிய இணையதளம் என்பது இந்த வருட கூட்டத்தின் கருப்பொருளாகும்.

இன்றைய அறிவிப்பின் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபையை அடிப்படையாகக்கொண்ட இணையதள ஆளுகை மன்றத்தின் இந்திய பிரிவு  தொடங்கப்பட்டுள்ளது. இணையதளம் சம்பந்தமான பொது கொள்கை விஷயங்களை பல தரப்பினருடன் விவாதிக்கும் தளமாக இந்த மன்றம் அமையும்.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திரு அனில் குமார் ஜெயின், அதிக எண்ணிக்கையிலான பிராட்பேண்ட் இணைப்புகளைப் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாகவும், அதிக அளவிலான இணையதள பயன்பாடும் நம்நாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். எனவே இந்தியர்களின் லட்சியங்கள், சர்வதேச கொள்கை வடிவமைப்பு மற்றும் பங்குதாரர்களின் கலந்துரையாடலில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிராட்பேண்ட் சேவையின் வளர்ச்சி, இந்திய சமூகத்தின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கான சிறந்த முன்முயற்சி, இந்திய இணையதள ஆளுகை மன்றம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களிடையே இந்த நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொள்கை வடிவமைப்பில் வருங்கால சந்ததியினர் ஈடுபடுவதற்கு அவர்களைத் தயார்படுத்தவும் ஆகஸ்ட் முதல் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்திய இணையதள ஆளுகை மன்றம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744012

*****************(Release ID: 1744123) Visitor Counter : 196