உள்துறை அமைச்சகம்
ஐதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சிநிறைவு விழா: 144 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சியை முடித்தனர்
Posted On:
06 AUG 2021 2:07PM by PIB Chennai
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், 72வது பயிற்சி நிறைவு விழா இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இங்கு பயிற்சி பெற்ற 33 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 144 ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் கலந்து கொண்டனர். நேபாளம், பூட்டான், மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளைச் சேர்ந்த 34 பயிற்சி அதிகாரிகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனர் திரு அதுல் கர்வால் உட்பட மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு நித்யானந் ராய் பேசியதாவது:
சிறந்த அகில இந்திய பணி இல்லையென்றால், ஒற்றுமை இருக்காது, ஒருங்கிணைந்த இந்தியாவை பெற முடியாது என இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் கூறினார். நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருப்பதில், ஐபிஎஸ் அதிகாரிகளின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இவற்றுக்கு மேலாக, எந்த சூழ்நிலையிலும், உண்மைக்காக தார்மீக நிலைப்பாட்டை எடுக்க உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்.
நாடுதான் எப்போது முதலில் இருக்க வேண்டும் என்ற பிரதமரின் அடிப்படை உணர்வு, மத்திய உள்துறை அமைச்சரின் வேலை மற்றும் உணர்திறன் கொண்ட காவல்துறை ஆகியவற்றை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் இருப்பீர்கள் என நான் உறுதியாக உள்ளேன். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய பண்புகளுக்கு ஏற்ப நீங்கள் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
பூட்டான், மாலத்தீவு, மொரீசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றது மகிழ்ச்சி. இந்த தருணத்தில் உங்களுக்கு வாழ்த்துகள். இந்த பயிற்சியில் ஏற்பட்ட உறவு நமது நாடுகள் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நித்யானந் ராய் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743128
*****************
(Release ID: 1743372)
Visitor Counter : 237