இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் வெண்கலம் வென்றார்

Posted On: 04 AUG 2021 6:07PM by PIB Chennai

மல்யுத்த வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், 69 கிலோ எடைப் பிரிவில் இன்று உலக சாம்பியன் பட்டம் பெற்ற துருக்கி வீராங்கனை பஸ்செனாஸ் சுர்மெனேலியிடம் (BusenazSurmeneli ) அரையிறுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இது நாட்டின் மூன்றாவது பதக்கமாகும். இதற்கு முன்னதாக பேட்மிண்டன் விளையாட்டில் பிவி சிந்து வெண்கலப் பதக்கமும், பழுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்கு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு.நரேந்திர மோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில், "வாழ்த்துகள் லவ்லினா போர்கோஹைன்! உங்கள் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் நீங்கள் தேசத்தைப் பெருமை அடையச் செய்துள்ளீர்கள். ஒலிம்பிக் போட்டிகளில் நீங்கள் பெற்ற வெண்கலப் பதக்கம் நாட்டில் உள்ள இளைஞர்களை, குறிப்பாக பெண்களை, அவர்களின் முன்னாள் உள்ள சவால்களை எதிர்த்து போரிட்டு சாதிக்கவும், அவர்களின் கனவுகளை நனைவாக்கவும் உத்வேகம் அளிக்கும்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனை வாழ்த்தினார். இது பற்றி பிரதமர்  திரு.நரேந்திர மோடி டிவிட்டரில், "சிறப்பாக சண்டையிட்டீர்கள் லவ்லினா போர்கோஹைன்! மல்யுத்த களத்தில் அவரது வெற்றி பல்வேறு இந்தியர்களை ஊக்குவிக்கும். அவரது விடாமுயற்சி வியக்கத்தக்கது. வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரின் எதிர்காலம் சிறக்கவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் டிவிட்டரில், "லவ்லினா, அவரின் சிறந்த திறனைக் காண்பித்துள்ளார். அவரது சாதனைகளைக் கண்டு இந்தியா மிகவும் பெருமை அடைகிறது. அவரது முதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார், அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது" என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742410

----(Release ID: 1742509) Visitor Counter : 84