நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்க மாட்டார்கள் - பிரதமர்
Posted On:
03 AUG 2021 3:37PM by PIB Chennai
‘‘எந்த ஏழையும் பட்டினியுடன் தூங்க மாட்டார்கள்’’ என கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் (ஏழைகள் நல உணவுத் திட்டம்) பயனாளிகளுடன் பேசுகையில் பிரதமர் குறிப்பிட்டார்.
குஜராத்தில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள், இலவச ரேஷன் பெறுகின்றனர். இந்த இலவச ரேஷன், ஏழைகளின் துயரத்தை குறைத்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எந்தவிதப் பேரிடராக இருந்தாலும், நாடு தன்னுடன் உள்ளது என்பதை ஏழைகள் உணர வேண்டும் என பிரதமர் கூறினார்.
சுதந்திரத்துக்குப்பின், ஏழைகளுக்கு மலிவு விலை உணவு அளிப்பது பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசுமும் பேசியது. மலிவு ரேஷன் திட்டங்களுக்கான நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது, ஆனால், அதன் தாக்கம் போதுமானதாக இல்லை. நாட்டின் உணவு தானிய இருப்புகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. ஆனால் அதே விகிதத்தில் பசிப்பிணியும் ஊட்டச்சத்து குறைபாடும் குறையவில்லை.
இதற்கு முக்கிய காரணம் திறனுள்ள விநியோக முறை குறைவாக இருப்பதுதான்.
இந்த நிலையை மாற்ற, 2014ம் ஆண்டுக்கு பிறகு புதிய பணிகள் தொடங்கப்பட்டன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டனர் மற்றும் ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டன. இது, நூற்றாண்டின் மிகப் பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தப்பட்டபோதும், வர்த்தகம் பாதிக்கப்பட்டபோதும், ஒரு குடிமகன் கூட பட்டினி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய உதவியது. பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை உலகம் அங்கீகரித்தது. பெருந்தொற்று நேரத்தில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு, ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் இலவச ரேஷன் கிடைத்தது என பிரதமர் கூறினார்.
கோதுமை ரூ. 2/கிலோ, அரிசி ரூ. 3/கிலோ என்ற வழக்கமான ஒதுக்கீட்டுடன் 5 கிலோ கோதுமை & அரிசி ஒவ்வொரு பயனாளிக்கும் இன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
அதாவது, இந்த திட்டத்திற்கு முன்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ரேஷன், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தீபாவளி வரை நீடிக்கும். எந்த ஏழையும் பசியுடன் தூங்க மாட்டார்கள் என பிரதமர் கூறினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, புலம் பெயர் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டதற்கு குஜராத் அரசை அவர் பாராட்டினார்.
உள்கட்டமைப்புக்கு, நாடு இன்று பல லட்சக்கணக்கான கோடியை செலவு செய்கிறது, அதே நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, எளிதாக வாழ்வதற்கான புதிய அளவுருக்களையும் அமைக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டுக்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வீடுகளைப் பெற்றுள்ளன, 10 கோடிக் குடும்பங்கள் கழிவறைகளைப் பெற்றுள்ளன. அந்தளவுக்கு அவர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், ஜன்-தன் வங்கிக் கணக்கு முறையிலும் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741852
----
(Release ID: 1741998)