மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட் ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தது: மாநிலங்களவையில் தகவல்

Posted On: 29 JUL 2021 3:07PM by PIB Chennai

கொவிட் ஊரடங்கு  காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் அவர் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள்:

கொவிட் ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் வசதிகளை அளிக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக  பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான நடவடிக்கை கடந்த 2020ம் ஆண்டு மே 17ம் தேதி தொடங்கப்பட்டது. இது டிஜிட்டல்/ஆன்லைன்/ரேடியோ மற்றும் டி.வி வழியிலான கல்வி போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது.

திக்‌ஷா என்ற தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு, தரமான பள்ளி கல்வி பாடங்களை வழங்கியது. க்யூ.ஆர்  குறியீடு பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கிடைத்தன.

ஸ்வயம் பிரபா டி.வி மூலம் ஒன்றாம் முதல் 12ம் வகுப்பு வரை தனி தனி சேனல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  

ரேடியோ மற்றும் சமூக ரேடியோ, விரிவாக பயன்படுத்தப்பட்டன மற்றும் சிபிஎஸ்இ பாடங்களுக்கு சிக்‌ஷாவாணி செயலி பயன்படுத்தப்படுகிறது. 

பார்வையற்ற மற்றும் காது கேளாத மாணவர்களுக்கு  டைசி என்ற டிஜிட்டல் தகவல் கருவி மற்றும் NIOS இணையதளம் / யூ டியூப்பில்  சைகை மொழி இ-பாடங்கள் உருவாக்கப்பட்டன.

இந்த அனைத்து திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கிறது.

ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பயிற்சி:

தொடக்கக் கல்வி அளவில் கற்றலை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை, நிஷ்தா (NISHTHA – National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement) என்ற பெயரில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்துக்கு   பயிற்சி திட்டத்தை தொடங்கியது. இந்த பயிற்சி மத்திய அரசின் சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.  

கொவிட்-19 சவால்கள் காரணமாக, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தொழில் மேம்பாட்டு வாய்ப்புகளை தொடர்ந்து வழங்க, திக்‌ஷா தளத்தை பயன்படுத்தி  நிஷ்தா ஆன்லைன் பயிற்சியை கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்தாண்டு ஜூன் வரை, சுமார் 24 லட்சம் ஆசிரியர்களுக்கு  இந்த டிஜிட்டல்  பயிற்சி அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்வி வசதிகள்:

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இ-பாடங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஜூன் 8ம் தேதி வழங்கப்பட்டது. அவற்றை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.  https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/CWSN_E-Content_guidelines.pdf

இந்த வழிகாட்டுதல்கள் கீழ்கண்டவற்றை பரிந்துரைத்தன:

மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கற்கும் தேவைகளை நிறைவேற்ற டிஜிட்டல் பாடப்புத்தகங்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். 

காது கேளாத மாணவர்களுக்கு சைகை மொழியில் வீடியோக்கள்.

இ-பாடப்புத்தகங்கள்.

காது கேளாத மாணவர்களுக்கு தனியான டிடிஎச் சேனல் இயக்கம்.

பாடத்திட்டங்கள் குறைப்பு

முழுமையான கல்வி, விவேகமான சிந்தனை, கேள்வி எழுப்புதல், கண்டுபிடிப்பு, விவாதம், பகுப்பாய்வு அடிப்படையிலான கல்விக்கு இடம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை, 2020-ல் ஒவ்வொரு பாடத்திலும் பாடத் திட்டத்தின் அளவு குறைக்கப்படும்.  கருத்துக்கள்,பயன்பாடு மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற விஷயங்களில் புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்தும். கற்பித்தலும், கற்றலும் கலந்துரையாடல் முறையில் நடத்தப்படும். கேள்வி கேட்பது ஊக்குவிக்கப்படும். வகுப்பறைகள், மாணவர்களின் நகைச்சுவை, படைப்பாற்றல், ஆய்வு நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதாக இருந்து ஆழ்ந்த அனுபவமான கற்றலுக்கு வழிவகுக்கும்.  

ஊரடங்கு காலத்தில் கல்வி இழப்பை குறைக்க நடவடிக்கை:

கொவிட் முடக்க காலத்தில் மாணவர்களின் கல்வி இழப்பை குறைக்க அரசு பல திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியது. ஊரடங்கு காரணமாக கல்வி இழப்பை குறைக்க தொலைதார கல்வி, திறந்த வெளி படிப்புகளை கல்வி நிறுவனங்கள் வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

மாற்றியமைக்கப்பட்ட தொலைதூர கல்வி திட்டங்கள், ஆன்லைன் கல்வி நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மாற்றியமைத்தது. இதன் விவரங்கள் யுஜிசி இணையதளத்தில் http://www.ugc.ac.in/pdfnews/221580.pdf. உள்ளன.

ஆன்லைன் கல்வி முறையை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்ற, விரிவான வழிகாட்டுதல்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழங்கியது. 

42 புதிய பல்கலைக்கழகங்கள், 51 நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி திட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்டன. மாணவர்களுக்கு சிறப்பான வசதிகள் வழங்க, பல மாநிலங்களில் கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்தாண்டு ஜூன் வரை 583 புதிய கல்வி மையங்களை, திறந்தவெளி பள்ளிகளுக்கான தேசிய மையமம் (NIOS)திறந்தது. 

பள்ளிக் கல்விக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் கீழ்கண்ட இணைப்பில் உள்ளன. https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/DOSEL_COMPILATION_ON_COVID_ACTIVITIES.pdf

ஊரக பகுதிகளில் கல்வி மேம்பாட்டு திட்டம்:

பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைந்த திட்டமாக சமக்ரா ஷிக்க்ஷா திட்டத்தை மத்திய அரசு 2018-19ம் ஆண்டில் தொடங்கியது. இதில் ஆரம்ப கல்வி முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்தும் உள்ளடங்கிய, சமமான, தரமான கல்வியை உறுதி செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.  இத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பள்ளிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும்தரமான கல்வி, ஆசிரியர்களின் ஊதியத்தில் நிதியுதவி போன்றவற்றுக்கு உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740284

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740276

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740277

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740275

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740274

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740273

*****************


(Release ID: 1740389)