பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பிராட்பேண்ட்(அகண்ட அலைவரிசை) சேவை மூலம் பாரத் நெட் திட்டத்துடன் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைப்பு : மக்களவையில் தகவல்
Posted On:
27 JUL 2021 6:08PM by PIB Chennai
பிராட்பேண்ட் சேவை மூலம், பாரத் நெட் திட்டத்துடன் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டதாக, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஸ்வர் பாட்டீல் தெரிவித்தார்.
மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகளைச் சீரமைக்க, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மின்னணு-பஞ்சாயத்து திட்டத்தின் கீழ், மின்னணு-கிராம சுவராஜ் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம் திட்டமிடல், கணக்கியல், நிதிநிலை அறிக்கை, ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துதல் போன்ற பல செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2021-22ம் நிதியாண்டில், தற்போது வரை 2,53,716 கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2,25,153 கிராமப் பஞ்சாயத்துக்கள், 2021-22ம் ஆண்டு கணக்கியல் நடவடிக்கைக்கு மின்னணு- கிராம சுவராஜ் திட்டத்தை பின்பற்றுகின்றன. மேலும், 2,24,671 பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், மின்னணு- கிராம சுவராஜ் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. 2020-21ம் நிதியாண்டில், 1,54,091 கிராமப் பஞ்சாயத்துக்கள் ரூ. 48,299 கோடி மதிப்புக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. 2021-22ம் ஆண்டில் 1,09,565 பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ரூ. 7,699 கோடி அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. இதன் மாநில வாரியான விவரங்கள் இணைப்பு 1-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்க, பாரத்நெட் திட்டத்தை தொலைத் தொடர்புத்துறை ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தி வருகிறது. 16.7.2021ம் தேதி வரை மொத்தம் 1,58,266 கிராமப் பஞ்சாயத்து இணைப்புகள் (வட்டார தலைமையகம் உட்பட) இணையவழி சேவைக்கு தயார் நிலையில் உள்ளன.
கொரோனா ஊரடங்குக் காரணமாக, இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான இலக்கு தேதி, 2021 ஆகஸ்டில் இருந்து 2023 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 மாநிலங்களில் ஸ்வாமித்வா திட்டம்:
கிராமங்களில் வீடுகளை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு, ஆவண உரிமை வழங்கும் நோக்கில் ஸ்வாமித்வா திட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது. ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் நிலங்கள் படம் பிடிக்கப்பட்டு, வீட்டு உரிமையாளருக்கு சட்டபடியான உரிமை, சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன. ஸ்வாமித்வா திட்டம் பரிசோதனை அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் 2020-21ம் ஆண்டில் தொடங்கியது. 2021-2025ம் ஆண்டுகளில் இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். ஸ்வாமித்வா திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் இந்தியா சர்வே அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும். இதுவரை 26 மாநிலங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தில்லியில் கிராம உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால், அங்கு ஸ்வாமித்வா திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739569
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739567
----
(Release ID: 1739679)
Visitor Counter : 227