நிலக்கரி அமைச்சகம்

நிலக்கரி சுரங்கங்களின் ஏலம், மாசுக் கட்டுப்பாட்டு வழிமுறைகள், சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கப் பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

Posted On: 27 JUL 2021 1:41PM by PIB Chennai

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, ஜூலை 26 அன்று மாநிலங்களவையில் அளித்த தகவல் பின்வருமாறு:

தனியார் துறை நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்காக பிரத்தியேகமாக நிலக்கரிச் சுரங்கங்கள் அடையாளம் காணப்படுவதில்லை. நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள்) சட்டம், 2015, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆகியவற்றின் கீழ் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஏலமுறையில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளன. இதுவரை 46 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இவற்றுள் 44 சுரங்கங்கள் தனியார் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளன. நிலக்கரியின் விற்பனைக்காக தற்போதைய ஏலத்தில் 67 சுரங்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏல முறை நடைபெற்று வருகிறது. நிலக்கரி விற்பனைக்காக அண்மையில் ஏலத்தில் விடப்பட்ட 20 சுரங்கங்களிலிருந்து வரக்கூடும் ஆண்டு வருவாய் ரூ. 7419 கோடியாக இருக்கக்கூடும். இந்த 20 சுரங்கங்களில் சுமார் 79,019 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் சுரங்கப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக கோல் இந்தியா நிறுவனத்தின் அனைத்துத் திட்டங்களும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்திற்கான அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்பீடுகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குகிறது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் அனுமதி பெறப்படுகிறது. திட்டங்கள் அமல்படுத்தப்படும் போது சுற்றுச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மண்டல அலுவலகங்கள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் நிலக்கரி நிறுவனங்களின் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்

மேலும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி மாசு அதிகம் ஏற்படுத்தும் பொருட்களைக் கையாள்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு அனைத்து மண்டல ரயில்வேக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நிலக்கரியை எடுத்துச் செல்லும்போது காற்று மாசடைவதைத் தடுப்பதற்காக கோல் இந்தியா நிறுவனம் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறதுமரங்களை அதிகம் நடுவதால் காற்று மாசுக் குறையும் என்பதால் மரம் நடும் நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

சிதிலமடைந்தச் சுரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநிலம்/ மாவட்டத்தின் பொறுப்பாகும். இதுபோன்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை தடுப்பதற்காக கோல் இந்தியா நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அங்கீகரிக்கப்படாத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் குறித்த புகார்களை அளிப்பதற்காக “Khanan Prahari” என்ற செல்பேசி செயலியையும், நிலக்கரிச் சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு முறை என்ற இணையவழிச் செயலியையும் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739415

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739436

 

----



(Release ID: 1739553) Visitor Counter : 233