அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவிகளிடையே அறிவியல் பிரிவை பிரபலப்படுத்துவதற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
27 JUL 2021 12:55PM by PIB Chennai
மேல்நிலைப் பள்ளி அளவில் மாணவிகளிடையே அறிவியல் பிரிவை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளின் இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக இன்று அவர் அளித்த பதிலில், 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் சிறந்த மாணவிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், குறிப்பாக பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ள துறைகளில் கல்வி மற்றும் பணியை மேற்கொள்வதற்காக 2019-20-ஆம் ஆண்டு ‘விக்யான் ஜோதி' என்ற புதிய திட்டத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடங்கியதாகக் கூறினார்.
தற்போது நாட்டின் 100 மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அறிவியல் முகாம்கள், சிறப்பு கருத்தரங்கங்கள்/ வகுப்புகள், மாணவர்கள்- பெற்றோர்களுக்கான ஆலோசனை, முன்மாதிரி நபர்களுடன் கலந்துரையாடல்கள் போன்றவை இந்தத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் மாணவிகள், அருகில் உள்ள அறிவியல் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைகளைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அடல் ஆய்வகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அவற்றை அணுகும் வாய்ப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், அறிவியல் மற்றும் பொறியியலில் பெண்கள்- கிரண் (WISE-KIRAN) என்ற திட்டத்தின் மூலம் இந்தத் துறையில் பெண் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ‘மகளிர் விஞ்ஞானி திட்டம்', பணியிலிருந்து சில காலம் விலகியிருந்த மகளிர் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளருக்கு மூன்று பகுதிகளின் கீழ் வேலை வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த மூன்று பகுதிகள் பின்வருமாறு:
i. அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக மகளிர் விஞ்ஞானிகள் திட்டம்-ஏ (WOS-A).
ii. சமூக நலனிற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இடையீடுகள் அடங்கிய ஆராய்ச்சிக்காக மகளிர் விஞ்ஞானிகள் திட்டம்-பி (WOS-B).
iii. அறிவுசார் சொத்துரிமைகளில் உள்ளிருப்புப் பயிற்சிக்காக மகளிர் விஞ்ஞானிகள் திட்டம்-சி (WOS-C).
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பாலின வேறுபாட்டைக் குறைப்பதற்காகவும், ஆராய்ச்சிப் பணிகளில் மகளிர் விஞ்ஞானிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்(செர்ப்), கடந்த 2020-21 ஆம் ஆண்டில் செர்ப்-பவர் (ஆய்வு சம்பந்தமான ஆராய்ச்சியில் பெண்களுக்கான வாய்ப்பை ஊக்குவித்தல்) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739399
-----
(Release ID: 1739433)
Visitor Counter : 285