குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் காதி பொருட்களின் விற்பனை பெருமடங்கு அதிகரிப்பு

Posted On: 25 JUL 2021 4:25PM by PIB Chennai

காதி பொருட்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து வருவதன் காரணமாக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் காதி பொருட்களின் விற்பனை பெருவாரியாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 2016 முதல் புதுதில்லியின் கெனாட் பிளேசில் உள்ள காதி விற்பனை வளாகத்தில் 11 வெவ்வேறு தருணங்களில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்திருக்கிறது. இன்று (ஜூலை 25, 2021) வானொலியில் ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் காதியின் இந்த செயல் திறன் பற்றி குறிப்பிடப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றின் காலத்தில், பொருளாதார வீழ்ச்சியின் போதும் 2020 அக்டோபர்- நவம்பர் மாதங்களில் காதியின் ஒருநாள் விற்பனை நான்கு முறை ரூ. 1 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டிலும் இதேபோல நான்கு முறை ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி கெனாட் பிளேசில் ஒரு நாளில் பதிவான  ரூ. 1.27 கோடி விற்பனை தான் இன்று வரையிலான அளவில் மிக அதிகமானதாகும்.

அக்டோபர் 22, 2016 அன்று, முதன்முறையாக இந்த விற்பனை வளாகத்தில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1.16 கோடியை எட்டியது. இதற்கு முன்பாக கடந்த 2014, அக்டோபர் 4-ஆம் தேதி பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அடுத்த நாளில் காதியின் ஒருநாள் விற்பனை ரூ. 66.81 லட்சமாகப் பதிவானது. வானொலி நிகழ்ச்சியின் முதல் நாளன்று நாட்டு மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு காதி பொருளையாவது வாங்குமாறும், அதன்மூலம் ஏழை கைவினைஞர்கள் தீபாவளியன்று தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

பிரதமரின் தொடர் ஆதரவால் காதியின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு விநய் குமார் சக்சேனா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738820

-----



(Release ID: 1738832) Visitor Counter : 262