பாதுகாப்பு அமைச்சகம்

மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் முப்படையினர் தீவிரம்

Posted On: 25 JUL 2021 9:59AM by PIB Chennai

மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கோவாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய முப்படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவின் ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சங்கிலி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் காலாட்படைகள், பொறியாளர்கள், தொலைத்தொடர்பு, மீட்பு மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய பணிக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிப்லன், ஷிரால், ஹட்காங்லே, பாலஸ் மிராஜ் பகுதிகளில் இந்தக் குழுவினர் பல்வேறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

கர்நாடகாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த டைவிங் நிபுணர்கள், ரப்பர் படகுகள், உயிர் கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 7 குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கத்ரா அணைக்கு அருகில் 165 நபர்களையும், கைகா பகுதிகளில் இருந்து 70 பேரையும் இந்தக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 400 பேர், இந்திய விமானப்படையினரால் , புவனேஸ்வர் கொல்கத்தா மற்றும் வதோதராவில் இருந்து புனே, மகாராஷ்டிராவின் கோலாப்பூர், ரத்தனகிரி மற்றும் கோவாவிற்கு  40 நிவாரண உபகரணங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்துகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதுடன், மீட்புப் பணிகளிலும் முப்படையினர் 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கூடுதல் மீட்புக் குழுக்களும், விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738743

 

----(Release ID: 1738805) Visitor Counter : 292