சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு-தனியார் பங்களிப்புடன் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி

Posted On: 22 JUL 2021 12:43PM by PIB Chennai

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று அளித்த பதில்கள் பின்வருமாறு:

பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ்  ரூ.5,35,000 கோடி  செலவில் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சி திட்ட சாலைகளுடன் கூடுதலாக 24,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலைகளை அமைக்கும் பாரத்மாலா முதல்கட்ட திட்டத்திற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இது தவிர, நாடு முழுவதும் 35 பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை கட்டாயம் அமைக்குமாறும் அந்தக் குழு உத்தரவிட்டது. இதன்படி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 35 நகரங்களில் அரசு- தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையைப் பொருத்தவரை இந்த திட்டத்திற்காக கண்டறியப்பட்டுள்ள 158 ஏக்கர் நிலப்பரப்பில், 122 ஏக்கர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 36 ஏக்கர்களை கையகப்படுத்தும் பணியில் மாநில அரசின் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகமான டிட்கோ ஈடுபட்டுவருகிறதுகோயம்புத்தூரில் இந்த திட்டத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை/ ஆய்வு மற்றும் நிலத்தை கண்டறிவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த 35 பூங்காக்களை அமைப்பதற்கான ஏல ஆவணங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை/ ஆய்வுகள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட ஏல ஆவணங்களின் அடிப்படையில் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் அனைத்து வழிகளும் ஃபாஸ்ட் டேக் வழிகளாக அறிவிப்பு:

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள  சுங்கச்சாவடிகளின்  அனைத்து வழிகளையும் ஃபாஸ்ட் டேக் வழிகளாக அரசு அறிவித்து, மின்னணு வாயிலாக கட்டணம் செலுத்தும் முறை பிப்ரவரி 15/16 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தற்போது அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. 2021 பிப்ரவரி 14-ஆம் தேதி 80%ஆக இருந்த ஃபாஸ்ட் டேக்கின் பயன்பாடு, இந்த அறிவிப்பிற்குப் பிறகு 96%ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 14-ஆம் தேதி நிலவரப்படி கூடுதலாக 3.54 கோடி ஃபாஸ்ட் டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 இன் கீழ் ஓட்டுனர் மற்றும் அவருக்கு அருகில் அமர்பவருக்கு காற்றுப்பை வசதியை ஏற்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணியில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள்:

கொவிட்-19 தொற்றால் அறிவிக்கப்பட்ட தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான பொது முடக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளினால் பொருட்கள், இயந்திரம் மற்றும் தொழிலாளர்களின் இயக்கம் மற்றும் விநியோகம்/ பணியில் ஏற்பட்ட இடர்பாடுகளால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டன. எனினும் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்ததாரர்கள்/ சலுகை பெற தகுதி பெற்றவர்கள்/ ஆலோசகர்களுக்கு போதிய உதவிகள் வழங்கப்பட்டதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் தாண்டி நடைபெற்றன. 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரூ  26,322 கோடி மதிப்பில் 890 கிலோமீட்டர் தொலைவிற்கு 31 திட்டங்களை மேற்கொள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகம் அனுமதி அளித்தது.

மாசு கட்டுப்பாட்டில் உள்ள (பியூசி) சான்றிதழின் வடிவமைப்பு:

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 இன் கீழ், நாடு முழுவதும் மாசு கட்டுப்பாட்டில் உள்ள (பியூசி) சான்றிதழின் படிவத்தை அமைச்சகம் பொதுவானதாக வடிவமைத்துள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989, விதி 115(7) இன்படி, “மோட்டார் வாகனம் முதலில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஓர் ஆண்டு காலத்திற்குப் பிறகு இதுபோன்று ஒவ்வொரு வாகனமும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற முகமைகள் வழங்கும் மாசு கட்டுப்பாட்டில் உள்ள சான்றிதழைப் பெற வேண்டும்.” இதற்காக அனைத்து மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு எரிவாயு நிலையங்களிலும் இதுபோன்ற மையம் அமைக்கப்படும். இந்த மையங்களில் அவ்வப்போது ஆய்வு செய்யுமாறு போக்குவரத்துத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்படாமல் முறைகேடுகளில் ஈடுபடும் மையங்களுக்கு மிக அதிக அபராதத்தை விதிக்குமாறும், அதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட மையத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலவை:

12% மற்றும் 15% எத்தனால் கலவையை பெட்ரோலில் வாகன எரிபொருளாக பயன்படுத்துவது குறித்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாடு மற்றும் இறக்குமதி மீதான சார்பை குறைப்பதற்காக பெட்ரோலுடன் 20% எத்தனால் கலவையை சேர்ப்பதற்கான கால அளவை ஐந்து ஆண்டுகள் குறைத்து, 2025-ஆம் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எத்தனால் கலப்பிற்கான செயல்திட்டம் 2020-25- நிதி ஆயோக் தயாரித்துள்ளதுமின்சாரம் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஊக்கத் தொகைகளை அரசு வழங்கிவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737646

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737650

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737648

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737647

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737644

                                                                                                   -----(Release ID: 1737774) Visitor Counter : 317