குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு,குறு நடுத்தர தொழில் தொழில்துறையின் திறன் விரிவாக்கம் மற்றும் அதிகரிப்பு: மாநிலங்களவையில் தகவல்

Posted On: 19 JUL 2021 4:32PM by PIB Chennai

சிறு, குறு நடுத்தர தொழில் தொழில்துறையின் திறன் விரிவாக்கம் மற்றும் அதிகரிப்புக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாநிலங்களவையில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே தெரிவித்தார்.

மாநிலங்களவையில்  குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

தற்சார்பு இந்தியா என்ற பெயரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ரூ.50,000 கோடியை புகுத்துவதற்கான நிதி பங்களிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடியை மத்திய அரசு அளிக்கும். ரூ.40 ஆயிரம் கோடி தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் திரட்டப்படும். இந்த முயற்சி தகுதியான குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு வளர்ச்சியை அளிக்கும்.

அவசரகால கடன் உத்திரவாத திட்டம்:

அவசரகால கடன் உதவி திட்டம் மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவைகள் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2ம் தேதி வரை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான கடன் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்புள்ள திட்டமாக உள்ளது. கடன் பெறுபவர்களின் தேவை மற்றும் தகுதி அடிப்படையை மதிப்பீடு செய்து, கடன் வழங்கும் அமைப்புகளால் இந்த கடன் வழங்கப்படுகிறது.

நான்கு பிரிவுகளாக வழங்கப்பட்ட அவசரகால கடன் உதவி திட்டங்கள் மூலம் கடந்த 2ம் தேதி வரை ரூ.2.73 லட்சம் கோடி கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ.2.14 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டன.

கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் கடன்கள்:

உற்பத்தி மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள குறு, சிறு நிறுவனங்களுக்கு, கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ், கடன் பெற தகுதியானவை. இத்திட்டத்தை குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத நிதி அறக்கட்டளை Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) அமல்படுத்துகிறது. 

இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 30ம் தேதி வரை, ரூ.2,72,007 கோடி மதிப்பிலான தொகைக்கு, மொத்தம் 53,86,739 உத்தரவாதங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. சிறிய நிதி நிறுவனங்கள் மூலமாக, சிறிய அளவில் கடன் பெறும் 25  லட்சம் பேருக்கு கடன் வழங்க   கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு அவசரகால கடன் உதவி திட்டமும் அறிவிக்கப்பட்டன.

புதிய குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துதல்:

உத்யோக் ஆதார் ஒப்பந்தம் (UAM) என்ற முறையை மாற்றி, உதயம் பதிவு (UR)  மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பதிவை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எளிமைபடுத்தியது.  இதற்கு கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் வெளிப்படையாக எந்த தடையும் இல்லாமல் சுய அறிவிப்பு அடிப்படையில் பதிவு செய்யலாம். இதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. ஐடிஆர் மற்றும் ஜிஎஸ்டிஐஎன் தானாக ஒருங்கிணைக்கப்படும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க  திட்டம், ஊரக வேலைவாய்ப்பு உருவாக்க  திட்டம், முத்ரா திட்டம் ஆகியவற்றின் பயன்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற முடியும். கொவிட் தொற்றால் பிரச்சினைகளை சந்தித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக இந்த நிவாரண அறிவிப்புகள வெளியிடப்பட்டன.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க  திட்டத்தின் கீழ், 2020-21ம் ஆண்டில் ஜூலை வரை 91,054 திட்டங்கள் தொடங்கப்பட்டு, 7,28,432 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 

ஊக்குவிப்பு:

நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை வளர்ச்சிக்கு, இத்துறையின் அமைச்சகம் பல திட்டங்களை அமல்படுத்தியது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம், பாரம்பரிய தொழில்களை மீட்பதற்கான நிதியுதவி திட்டம்புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திட்டம், ஊரக தொழில் மற்றும் தொழில் முனைவு திட்டம், வட்டி மானிய திட்டம், கடன் உத்திரவாத திட்டம், முதலீட்டுடன் தொடர்புடைய வட்டி மானிய திட்டம், தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

கொவிட்-19 பாதிப்புக்குப்பின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

 

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணை கடன் திட்டம்.

* குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பில், உத்திரவாதம் இன்றி தானியங்கி கடன்கள்

* நிதி பங்களிப்பு மூலம் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி திரட்டுதல்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாட்டுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய அளவுகோல்கள்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ.200 கோடி வரையிலான கொள்முதலுக்கு, சர்வதேச அளவிலான டெண்டருக்கு தடை.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736794

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736792

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736790

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736789

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736787

*****************

 


(Release ID: 1736944) Visitor Counter : 720