உள்துறை அமைச்சகம்

எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) வீரத்துடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா பிஎஸ்ஃஎப்பின் 18 ஆவது விருது வழங்கும் விழாவில் (18th Investiture Ceremony) விருதுகளை வழங்கி கௌரவித்தார்

Posted On: 17 JUL 2021 6:57PM by PIB Chennai

தில்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்புப் படையின் 18 ஆவது விருது வழங்கும்  விழாவில், எல்லை பாதுகாப்புப் படையில் வீரத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, அவர்களின் ஒப்பற்ற துணிச்சல், வீரம் மற்றும் சேவைக்காக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், ரஸ்தாம்ஜி நினைவு சொற்பொழிவை உள்துறை அமைச்சர் வழங்கினார். இதில், எல்லை பாதுகாப்புப் படையினர் குறித்த 'பாவா' எனும் ஆவணப் படமும் ஒளிபரப்பப்பட்டது.

உள்துறை விவகாரங்களுக்கான இணையமைச்சர்கள் திரு.நித்யானந்த் ராய், திரு.அஜய் குமார், மத்திய உள்துறை செயலாளர், எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர், மற்றும் பிற உயரதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் முதல் இயக்குநர் திரு.கே.எப்.ரஸ்தாம்ஜி அவர்களுக்கு மரியாதை செலுத்திய உள்துறை அமைச்சர், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மற்ற துணை ராணுவப் படையினரின் தியாகம் இல்லாவிட்டால் இந்தியா உலக வரைபடத்தில் பெருமையாக இடம்பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மோடி அரசு எல்லை பாதுகாப்பு உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர், ஒப்பிட்டு ஆய்வு செய்தால் கடந்த 2008 முதல் 2014 வரை 3,610 கிமீ தூரத்துக்கு எல்லை சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், 2014 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் 4,764 கிமீ எல்லை சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், 2008 முதல் 2014 வரையில் சாலை அமைக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,000 கோடியாக இருந்த நிலையில், 2014-2020-ல் இது ரூ.44,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், 2022 ஆம் ஆண்டுக்குள் எல்லையில் வேலிகள் அமைக்கும் பணி நிறைவடையும் என அவர் உறுதியளித்தார். எல்லையில் வெறும் 3 சதவிகிதப் பகுதியில் மட்டுமே ஊடுருவலுக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மீதமுள்ள 97 சதவிகிதப் பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஊடுருவல் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் மககள் புலம்பெயற்தலை கண்டறிவதும், வளர்ச்சித் திட்டங்கள் அப்பகுதிகளுக்குச் கொண்டு சேர்ப்பதும் நமது பொறுப்பு என்றும், பாதுகாப்புப் படையினர் இதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திரு.அமித்ஷா கேட்டுக்கொண்டார்.

ஆளில்லா விமானங்கள் மூலமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மிகவும் முக்கியமானது என்றும், இதனைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறிய அவர், விரைவில் எல்லை பாதுகாப்புப் படையிடம் ஆளில்லா விமானங்களுக்கு எதிரான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப வசதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736448

----

 (Release ID: 1736466) Visitor Counter : 79