அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயிரி தொழில்நுட்பத்துறை, சேவை நிறுவனமாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது: டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 09 JUL 2021 6:13PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத்துறை, சேவை நிறுவனமாக செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என  டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் ஜித்தேந்திர சிங், இத்துறை விஞ்ஞானிகளுடன் முதல் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

கொவிட் தொற்று, உயிரிதொழில்நுட்பத்துறை மற்றும் மரபணு தலையீடுகள்  மீது கவனத்தை செலுத்தவைத்துள்ளது.  இது ஆராய்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய சுகாதார சூழல் சந்திக்கும் கேள்விகளுக்கு, இந்த ஆராய்ச்சிகளால் பதில் அளிக்க முடியும். 

ஆராய்ச்சிக்கும், உலக மருத்துவத்துக்கும் பங்களிப்பை அளிக்க இந்தியாவில் ஏராளமான பொருள் வளம் உள்ளது. இந்திய மரபணு வகை, உலகின் மற்ற நாடுகளை விட வேறுபட்டதாக உள்ளது. தற்போது பரவும் கொரோனா வைரசும் வேறுபாடுடன் உள்ளது. இந்திய நோயாளிகளுக்கு ஏற்ற தீர்வுகளை வழங்கும் பொறுப்பு, இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் உள்ளது.

உயிரி தொழில்நுட்ப துறையில் அதிக ஆற்றல் இருந்தும், அது உகந்தமுறையில் பயன்படுத்தப்பட வில்லை. ஆனால், தற்போது அதற்கு அழுத்தம் கொடுத்து, விரைவாக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எய்ம்ஸ் போன்ற நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்களுடன், இணைந்து கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கான சாத்தியங்களை உயிரி தொழில்நுட்பத்துறை ஆராய வேண்டும். அதே நேரத்தில் இத்திட்டங்களில், தனியார் நிறுவனங்களையும், தொடக்க நிறுவனங்களையும் ஈடுபடுத்த வேண்டும். எளிதான வாழ்க்கை, எளிதான ஆரோக்கியம் என மக்களுக்கு சேவை அளிக்கும் துறையாக உயிரிதொழில்நுட்பத்துறை உருவாகும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் பேசினார்.

மூத்த விஞ்ஞானிகள், உயிரிதொழில்நுட்பத்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734285

*****************



(Release ID: 1734312) Visitor Counter : 271