கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் 18-வது கூட்டம்
Posted On:
24 JUN 2021 3:00PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலின் 18-வது கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தலைமை தாங்கினார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் பயன்பெறும் வகையிலும், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றவும் ஒரு தேசிய திட்டத்தை வடிவமைப்பது தான் கடல்சார் மாநில மேம்பாட்டுக் கவுன்சிலின் முக்கிய நோக்கம் என்று கூட்டத்தின் போது அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சி, மாநிலங்களின் வளர்ச்சியை சார்ந்திருப்பதாகவும், கூட்டாட்சி அமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்தக் கவுன்சில் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார். “தனித்து இருந்தால் நம்மால் வளர்ச்சியை அடைய முடியாது, ஒற்றுமையாக இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்”, என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்திய துறைமுகச் சட்டம் 2021, தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், துறைமுகங்களுடன் ரயில் மற்றும் சாலைகளை இணைத்தல், கடல்சார் பணிகளுக்காக மிதவை படகுத்துறை, கடல் விமான இயக்கம், சாகர்மாலா திட்டங்கள் மற்றும் தேசிய உள்கட்டமைப்பு முதலியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ. வேலு, கேரளாவின் துறைமுகங்கள் அமைச்சர் திரு அகமது தேவர்கோயில், மகாராஷ்டிராவின் ஜவுளி, மீன்வளம் மற்றும் துறைமுக மேம்பாட்டு அமைச்சர் திரு அஸ்லாம் ஷேக், கோவாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் திரு மைக்கேல் லோபோ, ஆந்திரப் பிரதேசத்தின் தொழில்துறை, வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு மேக்கபடி கௌதம் ரெட்டி, ஒடிசா மாநிலத்தின் திட்டங்கள், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திரு பத்மநாப் பெஹரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு) மற்றும் மாநிலங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துக் கொண்டனர். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730012
-----
(Release ID: 1730114)
Visitor Counter : 250