புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

எரிசக்தி அணுகலை விரிவுபடுத்துவதில் புத்தாக்க வழிகள் தேவை: மின்துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங் கருத்து

Posted On: 22 JUN 2021 1:56PM by PIB Chennai

 ‘‘எரிசக்தி குறித்த ஐ.நா உயர்நிலை குழு பேச்சுவார்த்தை 2021’’,  எரிசக்தி துறையில் இந்தியாவின் அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது’’ என  மத்திய மின்துறை மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

‘‘எரிசக்தி குறித்த ஐ.நா உயர்நிலை குழு பேச்சுவார்த்தை 2021’’ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. இதில் எரிசக்தி பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் உலக சாம்பியனாக இந்தியாவின் பங்கு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியதாவது:

இந்தியாவின் எரிசக்தி அணுகல் மற்றும் பரிமாற்ற கதைகளில் கற்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இது எரிசக்தி இலக்குகளை மேம்படுத்தவும் பருவநிலை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும் மற்ற நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எரிசக்தி குறித்த ஐ.நா உயர்நிலைக் குழு பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. 

அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் நவீன எரிசக்தி கிடைப்பதற்கான நிலையான வளர்ச்சி இலக்கை (எஸ்டிஜி-7)  அடைய இன்னும் 10 ஆண்டுகள் உள்ள நிலையில்எரிசக்தி அணுகலை விரிவுபடுத்துவதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை  மேம்படுத்துவதற்கும்  வலுவான அரசியல் உறுதி மற்றும் புத்தாக்க வழிகள் தேவை.

அனைவருக்கும் சம அளவில் எரிசக்தி கிடைக்கும் உலகளாவிய எரிசக்தி பரிமாற்றத்துக்கு உதவ, எரிசக்தி துறையில் நல்ல நிலையில் இருக்கும் நாடுகள் லட்சியத்துடன் பணியாற்ற வேண்டும்.

சூரிய மின்சக்தி, காற்று மற்றும் உயிரி எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன்சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மூலம் ஒத்துழைப்பு  ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம்,  2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இலக்கை 450 ஜிகா வாட் உயர்த்துவதற்கு  தேவையான ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்யும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729342

*****************



(Release ID: 1729387) Visitor Counter : 176