சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பொருளாதாரத்தை மீட்கவும், இயல்பு நிலைக்கு மீண்டும் செல்லவும் விரைவாக தடுப்பூசியை செலுத்துவது மிகவும் அவசியம்: டாக்டர் வி கே பால்

Posted On: 22 JUN 2021 9:31AM by PIB Chennai

கொவிட் தடுப்பூசிக்கான  மாற்றியமைக்கப்பட்ட வழிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளில் சுமார் 81 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

டிடி நியூஸ் தொலைக்காட்சியில் பேசிய அவர், முதல் நாளனாறு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை, பல்வேறு நாட்களுக்கும், வாரங்களுக்கும் தொடர்ந்து தடுப்பூசியை செலுத்தும்  செயல்திறனை இந்தியா பெற்றிருப்பதை எடுத்துரைப்பதாகக் கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, முறையான திட்டமிடல் மற்றும் இந்தப் பணியை இயக்க கதியில் மேற்கொண்டதன் காரணமாக இது சாத்தியமானது”, என்று டாக்டர் பால் மேலும் தெரிவித்தார்.

கொவிட் சரியான நடத்தைமுறைகள்  பின்பற்றப்பட்டு, பெருவாரியான மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டால், மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என்று டாக்டர் பால் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரம் மீளவும், இயல்பு பணிகள் மீண்டும் தொடங்கவும், அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வலியுறுத்தினார். நமது அன்றாடப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும், நமது சமூக வாழ்க்கையைத் தொடர வேண்டும், பள்ளிகள், வர்த்தகங்களை மீண்டும் திறக்க வேண்டும், நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்; துரிதகதியில் தடுப்பூசியை செலுத்தும்போது மட்டுமே நம்மால் இவை அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

நமது தடுப்பூசிகள் பாதுகாப்பற்றவை என்று கருதுவது மிகப்பெரிய தவறு என்று டாக்டர் பால் எச்சரித்தார். நமது தடுப்பூசிகளைப் போலவே, உலகளவில் செயல்படும் அனைத்துத் தடுப்பூசிகளும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியைப் பெற்றுள்ளன. சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் இவற்றைப் போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது அலை தற்போது குறைந்துள்ளதால் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு இதுவே சரியான தருணமாகும்”, என்று அவர் குறிப்பிட்டார். நமது சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தியதால் இரண்டாவது அலையிலிருந்து அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டனர் என்பதை டாக்டர் பால் சுட்டிக்காட்டினார்.

நேர்முக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவின்‌ தலைவர் டாக்டர் என் கே அரோரா பேசுகையில், அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதன் மூலம் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இன்று நாம் மேற்கொண்டது, மிகப்பெரிய சாதனை. தினசரி, குறைந்தது ஒரு கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்துவதே எங்களது இலக்கு. தினமும் 1.25 கோடி கொவிட்-19 டோஸ்களை சுலபமாக வழங்கும் வகையிலான செயல்திறன் நம்மிடையே உள்ளது”, என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729282

*****************


(Release ID: 1729375) Visitor Counter : 296