பிரதமர் அலுவலகம்
சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
21 JUN 2021 7:22AM by PIB Chennai
வணக்கம்! உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான 7-வது சர்வதேச யோகாதின வாழ்த்துகள்!
இன்று, உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், யோகா ஒரு நம்பிக்கை கீற்றாக திகழ்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும், இந்தியாவிலும் பெரிய பொது நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை என்றாலும், யோகா மீதான உற்சாகம் ஒரு சிறிதும் குறையவில்லை. கொரோனாவுக்கு இடையிலும், இந்த ஆண்டின் யோகா தின கருப்பொருளான ‘’ ஆரோக்கியத்துக்கான யோகா’’ கோடிக்கணக்கான மக்களிடம் உற்சாகத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து நாடுகள்,சமுதாயம், எல்லா மக்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன். ஒவ்வொருவரது வலிமைக்காகவும் நாம் ஒன்றிணைவோம்.
நண்பர்களே, நமது துறவிகள் யோகாவைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதாவது ஒவ்வொரு சூழலிலும் உறுதியாக இருப்போம். கட்டுப்பாட்டின் அளவுகோலாக யோகாவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் அது உறுதியாக திகழ்கிறது. இந்த உலக துன்பத்தில் இன்று யோகா தனது நிலையை நிரூபித்துள்ளது. இந்த ஒன்றரை ஆண்டுகளில், இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
நண்பர்களே, பல நாடுகளில் யோகா நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்படும் கலாச்சார திருவிழாவாக இருக்கவில்லை. இந்தக் கடினமான காலத்தில், மக்கள் அதனை எளிதாக மறந்து விட்டு, புறந்தள்ளியிருக்க முடியும். ஆனால், மாறாக, யோகா மீதான உற்சாகமும், பிரியமும் மக்களிடையே அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் யோகாவை கற்க லட்சக்கணக்கானோர் விரும்பியுள்ளனர். வாழ்க்கையில், கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை போதிக்கும் யோகாவைக் கற்க ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்.
நண்பர்களே, கண்ணுக்குத் தெரியாத தொற்று உலகை உலுக்கி வரும் நிலையில், திறமைகள், ஆதாரங்கள் அல்லது மன வலிமையுடன் எந்த நாடும் இதற்காக தயாராகவில்லை. துன்பத்தை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை யோகா ஊட்டுவதை நாம் கண்டுள்ளோம். இந்த நோயை எதிர்கொள்ளும் வலிமையை அதிகரிக்க யோகா மக்களுக்கு உதவியுள்ளது.
முன்களப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் நான் உரையாடிய போது, கொரோனாவுக்கு எதிரான போரில் யோகாவை பாதுகாப்பு கவசமாக தாங்கள் மாற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். யோகாவின் மூலம் மருத்துவர்கள் தங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். நோயாளிகள் விரைந்து குணமடைய அதை அவர்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். இன்று, மருத்துவர்களும், செவிலியர்களும் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு யோகாவை கற்பித்து வருவதையும், நோயாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதையும் பற்றிய பல்வேறு கதைகள் வெளிவருவதைக் காணலாம். ‘ பிரணாயாமம்’, ‘அனுலோம்-விலோம்’ போன்ற மூச்சுப் பயிற்சிகள் நமது சுவாச முறையை வலுப்படுத்த மிகவும் அவசியம் என உலகம் முழுவதும் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நண்பர்களே, பெரும் தமிழ் துறவி திருவள்ளுவர், ‘’நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.’’ என்று கூறியுள்ளார். அதாவது, ஒரு நோய் வந்தால், அதற்கு என்ன காரணம் என அதன் வேரைக் கண்டறிந்து, அதன்பின்னர் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். யோகா இதற்கான வழியைக் காட்டுகிறது. இன்று, மருத்துவ அறிவியலும் குணமடைதல் பற்றி ஆர்வம் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் யோகா பயனளிக்கிறது. யோகாவின் இந்த அம்சம் குறித்து, உலகம் முழுவதும் நிபுணர்கள் பல்வேறு விதமான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது குறித்து நான் மனநிறைவு அடைகிறேன்.
நமது உடலுக்கு யோகாவால் ஏற்படும் நன்மைகள், நமது எதிர்ப்பு சக்தி விஷயத்தில் ஏற்படும் நேர்மறையான விளைவுகள் குறித்து பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய சூழலில், பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்குவதற்கு முன்பாக, மாணவர்களுக்கு 10-15 நிமிடம் மூச்சுப் பயிற்சி-யோகா ஆகியவை போதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். இது கொரோனாவுக்கு எதிராக போராட குழந்தைகளைத் தயார்படுத்துகிறது.
நண்பர்களே, நமது இந்தியத் துறவிகள், யோகா செய்வதன் மூலம், நாம் நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை நமக்கு கற்பித்துள்ளனர். நமக்கு ஆரோக்கியம் என்பது பெரும் வாய்ப்பாகும். நல்ல உடல் நலம் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படை. நமது இந்திய சாதுக்கள் ஆரோக்கியம் பற்றி பேசும்போதெல்லாம், அது உடல் ஆரோக்கியத்தைப் பற்றியதாக மட்டும் இருந்ததில்லை. உடல் நலத்துடன் மன நலத்தையும் யோகா வலியுறுத்துகிறது. நாம் மூச்சுப் பயற்சி, தியானம் மற்றும் இதர யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, நமது மனதின் உள் உணர்வை உணருகிறோம். யோகாவின் மூலம், நமது வலிமையான உள்மனதின் ஆற்றலை நாம் உணர்கிறோம். உலகில் எந்தப் பிரச்சினையும், எதிர்மறை விஷயங்களும் நம்மை அசைக்க முடியாது என்பதை யோகா உணர்த்துகிறது. யோகா அழுத்தத்திலிருந்து வலிமையை, எதிர்மறை எண்ணத்திலிருந்து படைப்பாற்றலை அடையும் வழியைக் காட்டுகிறது. மன அழுத்தத்திலிருந்து, மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியிலிருந்து அருளையும் யோகா நமக்கு அளிக்கிறது.
நண்பர்களே, ஏராளமான பிரச்சினைகள் வெளியேறுவதாக யோகா நமக்கு கூறுகிறது. ஆனால், எண்ணற்ற தீர்வுகள் நம்மிடம் உள்ளன. நமது பிரபஞ்சத்தில் நாமே பெரும் ஆற்றல் ஆதாரமாக உள்ளோம். நம்மிடம் உள்ள பல பிளவுகளால், அந்த ஆற்றலை நாம் உணரவில்லை. மக்களின் வாழ்க்கையைத் துன்பம் சூழும் நேரங்களில், அவை ஒட்டுமொத்த ஆளுமையைப் பிரதிபலிக்கின்றன. பிளவுகளில் இருந்து ஒற்றுமைக்கு திரும்புவதே யோகா. ஒருமைத் தன்மையை உணரும் நிரூபிக்கப்பட்ட வழியே யோகா. குருதேவ் தாகூரின் வார்த்தைகளை நான் நினைவு படுத்துகிறேன். ’ நமது தனித்தன்மை என்பது கடவுளிடம் இருந்தும், மற்ற மனிதர்களிடம் இருந்தும் நம்மைத் தனிமைப்படுத்துவதல்ல. யோகாவின் முடிவற்ற உணர்வே ஒருமைத்தன்மை’’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா பல யுகங்களாகப் பின்பற்றி வரும் உலகமே ஒரே குடும்பம் என்னும் மந்திரம் தற்போது, உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. மனித குலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, நாம் அனைவரும், பரஸ்பர நலனுக்காக இப்போது பிரார்த்திக்கிறோம். முழுமையான ஆரோக்கியத்துக்கான வழியை யோகா எப்போதும் காட்டுகிறது. யோகா மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறது. மக்களின் சுகாதாரத்தில் யோகா தொடர்ந்து தடுப்பாகவும், அதேசமயம் ஆக்கபூர்வமான பங்கையும் வகிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சர்வதேச யோகாதினத்தை முன்மொழிந்த போது, அதன் பின்னால் இருந்த எழுச்சி இந்த யோகா அறிவியலை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவியது. இன்று, இந்த திசையில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் மற்றொரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது, எம்-யோகா செயலியின் ஆற்றலை உலகம் பெறவுள்ளது. இந்தச் செயலியில், ஏராளமான யோகா பயிற்சி வீடியோக்கள், உலகின் பல்வேறு மொழிகளில், அடிப்படை யோகா விதிமுறைகளுடன் கிடைக்கும். நவீன தொழில்நுட்பம் மற்றும் பழமையான அறிவியலின் கலவைக்கு இது பெரும் எடுத்துக்காட்டாகும். உலகம் முழுவதும் யோகாவை விரிவுபடுத்துவதில் எம் –யோகா செயலி பெரும்பங்காற்றும் என்றும், ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம் என்பதை வெற்றிகரமாக செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளும் எனவும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
நண்பர்களே, கீதையில், யோகா துன்பங்களில் இருந்து விடுதலை அளிக்கிறது என சொல்லப்பட்டுள்ளது. நாம் யோகா என்னும் மனிதகுலத்தின் இந்தப் பயணத்தில், அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு, முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்த இடமாக இருந்தாலும், எந்தச் சூழலாக இருந்தாலும், எந்த வயதாக இருந்தாலும், யோகாவில் அனைவருக்கும் ஏதாவதொரு தீர்வு உள்ளது. இன்று, உலகில், யோகாவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யோகா நிறுவனங்களின் எண்ணிக்கையும், இந்தியாவிலும், உலகிலும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிலையில், யோகாவின் அடிப்படை தத்துவத்தின் முக்கிய அம்சத்திலிருந்து வழுவாமல், அனைவரிடமும் அதனைக் கொண்டு செல்வது அவசியமாகும். யோகா ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என யோகாவுடன் தொடர்பு கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும். யோகா பற்றிய உறுதிமொழியை நாம் ஏற்கவேண்டும். இந்த உறுதி ஏற்பில் நமக்கு பிரியமானவர்களையும் இணைக்க வேண்டும். ‘’ ஒத்துழைப்புக்கு யோகா’’ என்னும் இந்த மந்திரம் புதிய எதிர்காலத்துக்கான வழியை நமக்கு காட்டுவதுடன், மனித குலத்தை அதிகாரமயப்படுத்தும்.
உங்களுக்கும், மனித குலம் அனைத்துக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகள் பல!
பொறுப்பு துறப்பு ; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெய்ர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
-----
(Release ID: 1729077)
Visitor Counter : 252
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam