குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பெருந்தொற்றுக்கு இடையேயும் 2020-21 ஆம் நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் விற்பனை பெருமளவு உயர்வு

Posted On: 17 JUN 2021 1:53PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றினால் பெரும் தாக்கம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், மிக அதிக அளவிலான வியாபாரத்தை மேற்கொண்டுள்ளது.  2020-21-ஆம் வருடத்தில் இந்த  நிறுவனத்தின் ஆண்டு வியாபாரம் ரூ. 95,741.74 கோடியாக இருந்தது. இது 2019-20 ஆம் ஆண்டின் ரூ. 88,877 கோடி வியாபாரத்தை விட 7.71% அதிகமாகும்.

2015-16 ஆம் ஆண்டில் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2020-21 ஆம் ஆண்டு காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறை 101% வளர்ச்சியைப் பெற்றதுடன், இந்தக் காலகட்டத்தில் ஒட்டு மொத்த விற்பனையின் அளவு 128.66% அதிகரித்தது.

காதி மின்னணுத் தளம், முகக் கவசங்கள், காலணிகள், இயற்கை வர்ணங்கள், கை சுத்திகரிப்பான்கள் போன்ற முன்முயற்சிகளின் துவக்கத்தாலும், சுதேசி பொருட்களுக்கு அரசின் ஊக்குவிப்பு, துணை ராணுவ படையினர் உடனான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் ஆகியவற்றினால் இந்தத் துறையின் விற்பனை பெருந்தொற்றின் இடையேயும் வெகுவாக அதிகரித்தது. 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 65,393.40 கோடியாக இருந்த உற்பத்தி, 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 70,329.67 கோடியாக அதிகரித்தது. அதேபோல 2019- 20 ஆம் நிதியாண்டில் ரூ. 84,675.29 கோடியாக இருந்த கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2020-21ஆம் நிதியாண்டில் ரூ. 92,214.03 கோடியாக உயர்ந்தது.

எனினும் பெருந்தொற்றினால் நூற்பு மற்றும் நெசவு பணிகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக காதித் துறையின் உற்பத்தி மற்றும் விற்பனை ஓரளவு குறைந்தது. 2020-21 ஆம் ஆண்டில் காதித் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி ரூ.1904.49 கோடியாக இருந்தது. 2019-20 ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தி ரூ. 2292.44 கோடியாகும். அதேபோல 2019-20 ஆம் ஆண்டு ரூ. 4211.26 கோடியாக இருந்த காதியின் விற்பனை, இந்தாண்டு ரூ.3527.71 கோடியாக பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727869

------



(Release ID: 1727945) Visitor Counter : 210