பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொவிட் மருத்துவமனையை சாகர் மாவட்டத்தில் உள்ள பினாவில் பெட்ரோலிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ்சிங் சவுகான் திறந்து வைத்தனர்

Posted On: 12 JUN 2021 5:17PM by PIB Chennai

மத்திய பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் அம்மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பினாவில் தற்காலிக கொவிட் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தனர்.

200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட இந்த மிகப்பெரிய கொவிட்-19 மருத்துவமனை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பினா சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைந்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரத் ஓமன் ரிஃபைனரீஸ் இம்மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கும்.

ஆக்சிஜன் நிரப்பும் ஆலைக்கும் மத்திய அமைச்சரும் முதல்வரும் அடிக்கல் நாட்டினர். ஒரு நாளைக்கு 2000 ஆக்சிஜன் உருளைகள் திறன் கொண்ட இந்த ஆலை, சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளின் தேவையை பூர்த்தி செய்யும்.

நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், 90 சதவீத தூய்மை அளவை கொண்ட ஆக்சிஜன் வாயுவை ஒரு நாளைக்கு 10 டன் என்ற அளவுக்கும், ஒரு நாளைக்கு 4 லட்சம் லிட்டர் குடிநீரையும் பினா சுத்திகரிப்பு ஆலை மருத்துவமனைக்கு வழங்கும் என்றார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் முயற்சிகளை பாராட்டிய அவர், கொவிட்-19- கட்டுப்படுத்துவதில் மருத்துவமனைக்கு பினா ஆலை உதவும் என்றார்.

பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பான நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை பாராட்டிய அமைச்சர், மாநிலத்தில் உள்ள 50 மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக தொற்று உறுதிப்படுத்தும் அளவு உள்ளதாக தெரிவித்தார்.

ஜூன் 21 முதல் இலவச தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை தொடங்கும் என்றும், நாட்டில் விரைவில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1726568

-------



(Release ID: 1726599) Visitor Counter : 167